ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 


தமிழகத்தின் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.


இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங், சார்பில் புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சர்பில் பிரவீனா உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார் என கே.எஸ்.அழகிரி பெருமிதமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில்; நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார பலத்தை நம்பியுள்ளனர்.


நாங்கள் ஜனநாயகத்தையும், கொள்கைகளையும் நம்பியுள்ளோம். இதனால் பொதுமக்கள் இந்த தேர்தல் முடிவுகளை ரசித்து எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். DMK - காங்., கூட்டணிக்கு பொது மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து உள்ளனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள். இந்த இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் வேட்பாளர் ராணுவ வீரராக இருந்து வந்தவர். எனவே குமரி முதல் இமயம் வரை அவருக்கு சொந்த மண்தான். 


நாங்குநேரி தொகுதிக்காக அவர் சிறப்பாக செயல்படுவார். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி காமராஜரின் திட்டங்களை செயல்படுத்தாமல் நழுவி விட்டது. தமிழகத்தில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால் அது பலவீனமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.