தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர், நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு மேலாக, திருநாவுக்கரசர் இந்த பதவியில் வகித்து வந்தார்.
இந்த ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பு, திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரசில் உள்ள இதர கட்சியினர் வற்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மேலிட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில், தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழக காங்கிரஸ் கட்சி புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார். மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
கே.எஸ்.அழகிரி:- கே.எஸ்.அழகிரி, கடந்த 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றி உள்ளார். 1996-ம் ஆண்டு தேர்தலில், அவர் த.மா.கா. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார்.