Book Review: அரசுப் பள்ளி ஆசிரியர் ந.பாலமுருகன் எழுதிய 'குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?' என்னும் அனுபவக் கட்டுரை நூலானது 96 பக்கங்களோடு 2023 இல் வெற்றி மொழி வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்விப் புலத்தில் வகுப்பறைக் கல்வியைக் கடந்த கல்வி இன்றைக்கு அவசியத் தேவையாக உள்ளது என்பதை இந்த நூல் வலியுறுத்திச் செல்கிறது. தமிழ் கல்விச் சூழலில் அரசுப் பள்ளி ஆசிரியர் பல்வேறு களச் செயல்பாடுகளுடன் மாணவர்களை இணைத்துச் செயல்படுகிறார். அச்செயல்பாடுகளையும் ஆவணப்படுத்தும் பணியையும் எளிதாகக் கடந்துவிட முடியாதபடி பேசுகிறது இந்நூல். ஆளுக்கொரு மரம் வளர்ப்போம், ஒரு குடம் தண்ணி ஊத்தி, தன்னானே தானேனன்னா, திறம்படக்கேள், வாசித்தலே சுவாசித்தல், இடுக்கண் களைவதாம் நட்பு, என் கடன் பணி செய்வதே, யாவரும் என் குழந்தைகளே, பிச்சை புகினும் கற்கை நன்றே, உளவியலோடு உறவாடுங்கள் உள்ளிட்ட உட்தலைப்புகளில் தன்னுடைய களச்செயல்பாடுகளை விவரித்து எழுதியுள்ளார் பாலமுருகன். மாணவர்களை இயற்கையோடு இயற்கையாகப் பிணைக்க பாலமுருகன் எடுத்துள்ள முயற்சி என்பது பெரும் முயற்சி. இதனைக் கல்விப்புலத்தில் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படும் களச் செயல்பாட்டாளர்கள் உணர்வார்கள்.


பறவைகளுக்கு நீர், உணவு வைப்பதும் அதன் மீது அக்கறை கொள்வதும் மரங்களின் மீதான ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்வதும், அதனுடைய அவசியத்தைத் தெரிந்து கொள்வதும், தமிழரின் பண்பாட்டுக் கலையைக் கற்பதும் அதன் மீதான பற்றை வளர்ப்பதும், பேரிடர் காலத்தில் பாதித்த மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய முன் வருவதும், அனைத்து மாணவர்களையும் சமமாகப் பாதிக்கும் மனோபாவத்தையும், அவர்களை உளவியலோடு அணுகுவதற்கும் பள்ளிக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த நன்கொடை கேட்டுப் பெறுவதும், மாணவர்கள் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ளவும், இயற்கையாக இணைந்த விளையாட்டுகளை விளையாடுவதும், போட்டித் தேர்வுகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்தி அரசுப் பணியில் அமர வைப்பதும் என்பதான பணிகள் மூலம் நிறைந்திருக்கிறது இந்நூல்.


மேலும் படிக்க: எழுத்தாளர் இமையம் 'கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரர்' - எழுத்தாளர் அரவிந்தன்


அரசுப் பள்ளி ஆசிரியரின் தொடர் அனுபவங்களை விவரித்து எழுதப்பட்டுள்ள இந்த நூலில் மாணவர்களுக்கான இடத்தை அவர்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் துலக்கம் பெறுகிறது. செயல்பாட்டின் முன்னெடுப்பின் வாயிலாக பெத்தநாயகனூர் அரசு உயர்நிலைப் பள்ளி தன் இருத்தலை அடையாளப்படுத்திச் செல்கிறது. மாணவர்களுக்கு அனுபவக் கல்வியை அளிப்பது ஒவ்வொரு ஆசிரியருடைய கடமையும் பொறுப்பும் என்பதான புள்ளியிலிருந்து நகர்கிறார் பாலமுருகன். தான் செய்து கொண்டிருக்கின்ற பணியை அர்ப்பணிப்போடு செய்யக்கூடிய ஒரு மனப்பக்குவத்தைக் கொண்டவரின் கட்டமைப்போடு உள்வாங்கி நகர்கிறது இந்நூல். மேலும் சுற்றுச்சூழலோடு இணைந்த கல்வியை நாம் முன்னெடுக்க தவறிவிட்டோம். மேலும், அக்கல்வியானது நவீன காலத்தில் வெகுதூரம் சென்றடைந்துவிட்டது என்பதான விமர்சனத்திற்குப் பதிலாக உள்ளது.


பண்பாடுசார்ந்த பல்வேறு அம்சங்களை மாணவர்களின் வழியாக மீட்டெடுக்கும் முயற்சி சாத்தியமானது. மேலும், பள்ளியானது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்த முப்புள்ளி. இந்த முப்புள்ளி பொதுமக்களிடம் விரிந்து செல்வது ஆரோக்கியமான செயல்பாடாகும். கல்விப் புலத்தில் மாணவர்களுக்கு அனுபவத்தை அளித்துவிட்டு அதன் மூலம் கல்வியைப் பெற வைக்கும் கல்விமுறை கவனிக்கத்தக்கதாகும். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையாக வைத்துள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மத்தியில் மாணவர்களிடத்து பாடப் புத்தகத்தைத் தாண்டிய புத்தக வாசிப்பை எளிமையாகப் புகுத்தியுள்ளார். மாணவர்களுக்குச் சமூக ஒட்டுதலுக்கான வாய்ப்பைக் கல்விப்புலத்தில் கேட்கும் நிலை என்பது கவலைக்குரிய ஒன்றாகும். ஆனால் களச்செயல்பாடு மூலம் மாணவர்களின் சமூக ஒட்டுதலை மீட்டுருவாக்கம் செய்துள்ளார் பாலமுருகன். 


'அன்பும் கருணையும் அழுத்தமாக இருக்கும் ஒருவர்தான் எழுத்தாளராக இருக்க முடியும்' என எழுத்தாளர் இமையம் கூறுகிறார். அதேபோல் மனிதன் மனிதனை நேசிப்பது இல்லை. அதனால்தான் பல்வேறு விதமான சிக்கல்கள் எழுகின்றன என்று கூறுகிறார். சக மனிதனையும் இயற்கையை உயிரினங்களையும் நேசிக்க கல்விப் புலத்தையும், வாசிப்பையும் கோரி நிற்கிறோம். அந்தப் பணியை பாலமுருகன் செவ்வனே செய்துள்ளதால் ஆசிரியர் என்பதிலிருந்து நகர்ந்து எழுத்தாளனாகப் பரிணமிக்கிறார். மேலும், கல்வி குறித்த சிந்தனைகள், பிரச்சினைகள், மாணவர்களின் உளச்சிக்கல் போன்றவற்றை உரையாடும் நூல்களுக்கு இடையே களச் செயல்பாடுகளில் இருந்து உருவான 'குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?' என்னும் நூலுக்கும் ஓர் இடமுண்டு என்பதில் ஐயமில்லை. மேலும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த நூல் சலசலப்பை ஏற்படுத்திச் செல்லும் என்பதே நிதர்சனம்.


மேலும் படிக்க: பதிப்பும் படைப்பும் : இந்திய, உலகப் புத்தகச் சந்தைகளில் தமிழ் பதிப்புத் துறைக்கான இடம்


மாணவர்களுக்கு என்ன தேவை? என்பதை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதில் ஆசிரியரின் நேர்த்தி வெளிச்சமிட்டுச் செல்கிறது. நூலானது எளிமையான மொழி நடையில் எவரும் வாசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆவணப்படுத்தியுள்ள பத்து அனுபவக் கட்டுரையில் வாசகர்கள் முன், பின் மாறிமாறிகூட அக்கட்டுரைகளை வாசிக்கலாம் என்பதான வாசிப்புச் சுதந்திரத்தை இந்த நூல் தருகிறது. மேலும் நூலில் இடம்பெற்றுள்ள சில பகுதிகள் தகவல்களாகவும் செய்தியாகவும் செல்வதால் விவரிப்பிலும் எடுத்துரைப்பிலும் தொய்வு உள்ளதை உணர முடிகிறது. அவை வாசகனின் வாசிப்பு தொடர்ச்சிக்குத் தடையும் அயற்சியும் ஏற்படுத்தாமல் செல்கிறது. மேலும், வாசகர்கள் குறைந்த நேரத்திலேயே வாசித்து முடிக்கும் விதமாக அமைந்துள்ளது. 


மேலும், நூலில் பதிவாகியுள்ள சில பகுதிகளில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல், வலியுறுத்தல், சுட்டிக் காட்டல் செய்திருப்பதை தவிர்த்து இருக்கலாம். அதேசமயத்தில் தன்னுடைய அனுபவப் பகிர்வில் பொதுமைப்படுத்திச் செல்லும் இடங்கள் வரவேற்கத்தக்க அம்சமாகவும் உள்ளன. தன்னுடைய பணியைச் சுயபுராணம், சுய தம்பட்டம் என்றில்லாமல் அமைதியாகச் சமூகத்திற்குப் பறைசாற்றுவது பாராட்டுக்குரியது. 'குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?' அட்டைப் படம் தமிழ்ப் பண்பாட்டுக் கலைகளையும், இயற்கைக் கல்வியையும் முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நூலின் உள்ளடக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது. மேலும், மாணவர்களின் மதிப்பீட்டை நூலின் பின் அட்டையில் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. அரசுப் பள்ளி ஆசிரியர் பாலமுருகன் முன்னெடுத்துச் செல்லும் பணிகளுக்குத் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளார் என்பதாகப் பார்க்கலாம். மாணவர்களை வழிநடத்திச் செல்வதிலும் நெறிப்படுத்துவதிலும் ஆசிரியர் பங்கு அளப்பரியது. அதில் நாம் எப்படிப் பயணப்படுகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் தொடர்பயணமும் அமையும். அதனடிப்படையில் மாணவர்களைச் சமூகத்தில் பங்கெடுக்க வைக்கும் பயணத்தில் மிகச்சரியான திசையில் பயணித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் பாலமுருகன்.


மேலும் படிக்க: ’முட்டுக்கட்டை போடாதீர்கள்’ பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ