தமிழ்நாட்டிற்கு தேவை ஆன்மீக மாடல்... தோல்வியுற்ற மாடல் திராவிட மாடல் - எல். முருகன்!
திராவிட மாடல் தோல்வியடைந்த மாடலாக உள்ளது என்றும் தமிழகத்திற்கு தேவையான மாடல் ஆன்மீக மாடல் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி தியாகராய அரங்கில் அண்ணல் அம்பேத்கர் 132ஆவது பிறந்த நாள் விழா முன்னிட்டு பாஜக சார்பாக கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் , பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி, கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டார்
கருத்தரங்கின் மேடையில் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன்,"அம்பேத்கர் மிகப்பெரிய பொருளாதார நிபுணராகவும் நீர்வளத் துறையில் அம்பேத்கர் பெரிய சாதனை படைத்துள்ளார். அண்ணல் அம்பேத்கர், நேரு அமைச்சரவையில் அவமானப்படுத்தப்பட்டார். நேரு காலகட்டத்தில் அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டார்.
நரேந்திர மோடி அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை கொண்டாடும்போது, அம்பேத்கரை உலகத் தலைவராக வெளிக்கொண்டு வந்தார். அது வரைக்கும் அம்பேத்கர் சாதனை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
அம்பேத்கரின் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி
அம்பேத்கருக்கு தாமதமாகதான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது, அதுவும் அத்வானியும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல, ஜவஹர்லால் நேருவுக்கு நினைவிடம் இருந்த காலகட்டத்தில் அம்பேத்கருக்கு பிறந்த வீடு எங்கு இருந்தது என்று கூட தெரியவில்லை. அதனை கண்டுபிடித்து அம்பேத்கர் பிறந்த இடத்தை புனித இடமாக அறிவித்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான்.
2015ஆம் ஆண்டு அன்று தொடங்கபட்டு பணிகள் கண்டறிந்து டெல்லியில் அம்பேத்கர் வீடு, லண்டனில் அம்பேத்கர் படித்த வீடு, மும்பையில் அவர் தங்கி இருந்த வீடு போன்ற 5 இடங்களில் அம்பேத்கருக்கு தேசிய மையம் அமைக்கப்பட்ட பெருமை பிரதமர் மோடியையே சாரும். நாம் அனைவரும் பயன்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை பீம் என்னும் செயலி மூலம் தான் செயல்படுகிறது. பீம் என்பது அம்பேத்கரின் பெயர். அம்பேத்கரின் கனவை நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறார்.
கூவம் கூவமாக தான் உள்ளது
அதே போல, நாம் சுதந்திரம் அடைந்து 75 வருடம் ஆகி விட்டது. அம்ரித் கால் என்ற நூறாவது சுதந்திர ஆண்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். 100ஆவது சுதந்திர நாளில் 2047இல் வெற்றி கண்ட நாடாக்க பிரதமர் மோடி தலைமையில் வேலை செய்து கொண்டு வருகிறோம். நம் நாட்டின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரம் அம்பேத்கரின் கனவோடு வீரநடை போட்டுக் கொண்டு இருக்கிறோம். பிரதமர் மோடி அம்பேத்கர் மீது பாசமும் நேசமும் வைத்துள்ளார் .
ஆனால் சிலர் சிங்கார சென்னையாக மாற்றுவோம் என கூறுகிறார்கள். கூவத்தை சுத்தப்படுத்துவோம், சிங்கப்பூர் ஆக மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லி இருபது வருடமாகிவிட்டது. இன்றைக்கும் கூவம், கூவம் ஆக தான் இருக்கிறது. இவை அனைத்தும் பிரதமர் மோடியால் தான் மாற்ற முடியும்.
பூஜ்ஜியத்தில் சமூக நீதி
சமூக நீதி என்றால் என்ன? நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் சமூக நீதி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினர் சமூக நீதியை தாங்கள் தான் குத்தகை எடுத்தது போல் பேசுகிறார்கள், இவை அனைத்தும் பேச்சில் மட்டும்தான் ஆனால் செயலில் ஏதும் இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் சமூக நீதி என்பது 0 சதவீதம் ஆக உள்ளது.
வேங்கை வாயலில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இந்த திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து 6 மாதம் மேல் ஆகிவிட்டது. தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுதான் திராவிட மாடலா. சேலம் பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி ஒருவர் ஆபாசமாக பேசியதை நாம் அனைவரும் அறிவோம். இதுவரை அவர் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தோல்வியடைந்த திராவிட மாடல்
அதேபோல பஞ்சாயத் தலைவர்கள், பஞ்சாயத்து அலுவலகத்திற்கு குடியரசு தினத்திலும், சுதந்திர தினத்திலும் கொடி ஏற்ற முடியாத சூழ்நிலை தான் இந்த திராவிட மாடல் ஆட்சியில் திகழ்கிறது. இதுதான் சமூக நீதியா?
மேலும், 12 பேர் பட்டியிலின மக்களில் இருந்து பாஜகவில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் மூன்றாவது இடத்தில் உள்ளார்கள். சமூக நீதி அடையாளம் என்பது பிரதமர் நரேந்திர மோடிதான். மேலும், திராவிட மாடல் தோல்வியற்ற மாடலாக உள்ளது. தமிழகத்திற்கு தேவையான மாடல் ஆன்மீக மாடல். ஆன்மீக மாடல் தான் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும், சமூக நீதியை வழங்கும்" என்றார்.
மேலும் படிக்க | முன்னாள் இந்துக்களே இப்போதைய இஸ்லாமியர்கள் - அமைச்சர் பொன்முடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ