எல்.பி.ஜி டேங்கர் லாரி 4-வது நாள் வேலை நிறுத்தப் போராட்டம்!
எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்தம் தொடரும் என எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
எரிவாயு நிரப்பும் ஒப்பந்தத்திற்கான டெண்டர் முறையை மாற்றியமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு சில கோரிக்கைளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
எனினும் பிரதான கோரிக்கையான மண்டல வாரியாக டெண்டர் முறை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து பேச்சுவார்த்தையின் விவரங்கள் இன்று நடைபெறவுள்ள அவசர பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.