’பாஜகவின் சதி திட்டம்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சூசகம்
ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு இருந்த சாலையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியவுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் குற்றவாளிக்கு பின்னால் இருப்பவர்களை காப்பாற்றும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு தமிழக உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது - குண்டாஸ் பாய வாய்ப்பு?
இந்த சூழலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில் எழுதியிருக்கும் பதிவில், " ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது." என கூறியுள்ளார். அதாவது கடந்த ஆண்டு பாஜக அலுவலகம் முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனை செய்ததும் இதே ரவுடி வினோத் தான். அதன்பின் சிறை சென்ற அவரை பாஜக வழக்கறிஞர் பிணையில் எடுத்துள்ளார். இதுதான் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. அதாவது திட்டமிட்டே கலவரம் ஏற்படுத்தும் நோக்குடனும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பது போன்று காட்டவும் ரவுடி கருக்கா வினோத் மூலம் சதிச் செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படி இருந்தால் இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? அக்கட்சியை சேர்ந்தவர்கள் எதற்காக ரவுடி வினோத்தை பிணையில் எடுக்க வேண்டும்? அதுவும் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் குண்டு வீசியவரை, மாவட்ட பொறுப்பில் இருக்கும் வழக்கறிஞர் ஏன் பிணையில் எடுத்தார்? என்றும், அந்த கோணத்திலும் இப்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த விஷயத்தில் ஆளுநர் தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை குற்றம்சாட்டுகிறார். அவருக்கு தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளுநரின் செயலாளர் கூறியிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு மாறானவை என்றும், பெட்ரோல் பாட்டில் குண்டு வீசப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பதையும், பல மணி நேரம் கழித்தே ஆளுநர் மாளிகை இது குறித்து புகார் கொடுத்திருகிறது என்றும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும், ஆளுநருக்கு தமிழக காவல்துறை முழு பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உளவுத்துறையை குற்றம்சாட்டிய அண்ணாமலை... ஹை அலெர்டில் தமிழக போலீஸ் - பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ