தமிழகத்தை தமிழகத்தில் உள்ளவர்களே ஆள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், ஓசூர் இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் சத்யா ஆகியோரை ஆதரித்து கிருஷ்ணகிரியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.


பிரச்சாரத்தின் போது இந்திய அரங்கில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.


மேலும் கடந்த 5 ஆண்டுகளாக, அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல்சோக்சி போன்ற 15 நபர்களுக்காக மோடி ஆட்சி நடத்தியிருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.


ஏழைகளுக்கு மாதம் 6,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் நியாய் திட்டம், வறுமையின் மீது நடத்தப்பட உள்ள சர்ஜிக்கல் தாக்குதல் என குறிப்பிட்ட ராகுல் காந்தி இத்திட்டம் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாத வகையில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் தமிழர்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை மோடி 5 நிமிடங்களில் புரிந்துகொள்வார், தமிழக மக்களை நாக்பூரில் உள்ளவர்கள் ஆள்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.


தமிழகத்தை தமிழகத்தில் உள்ளவர்களே ஆளும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற அனைவரும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.