பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மக்கள் தாங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துக் கொண்டு, அதை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார்கள். கொரோனா பரவலை தடுக்க தனித்திருப்பதும், விழிப்புடன் இருப்பதும் தான் சிறந்த தீர்வு எனும் நிலையில், 14 மணி நேரம் மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்காமல் தவிர்க்கும் வகையிலான இந்த நடவடிக்கை பயனளிக்கக் கூடியதாகும்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகள் பற்றி விளக்குவதற்காகவும், மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழக்கங்கள் குறித்து அறிவுறுத்துவதற்காகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்றிரவு  தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவை கொரோனா தாக்காது என்று மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும், மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், அச்சமின்றியும் செயல்பட்டு கொரோனா தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிரதமர் வழங்கிய அறிவுரைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் பரவலின்  மிக ஆபத்தான கட்டமான சமுதாயப் பரவலை தடுத்து நிறுத்திவிட முடியும் என்று ஒரு மருத்துவராக நான் நம்புகிறேன்.


இந்தியாவில் தொடக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பரவிய கொரோனா வைரஸ், இப்போது வேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இதுவரை சுமார் 200 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பபட்டு உள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்ப்பரவல் தடுக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் மிக மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே குறிப்பிட்டவாறு இதுவரை நடைபெற்ற இரு உலகப் போர்களையும் விட கடுமையான பாதிப்புகளை கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆகவே, கொரோனா வைரஸ் தாக்குதலை மூன்றாவது உலகப் போராக கருதி, அதன் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க இந்திய மக்கள் அனைவரும் தத்தமது பங்களிப்பை வழங்கி மனித குலத்தை காக்க வேண்டும்.


இந்தியாவில் குறிப்பாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே அதை தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் பா.ம.க. பரப்பி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அடுத்த 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாகவே பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். அவரது இந்த யோசனையை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். நாளை மறுநாள் பகல் முழுவதும் அடையாள ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமரும் வலியுறுத்தியிருப்பதன் மூலம், முழு அடைப்புடன் கூடிய ஊரடங்கு தான் கொரோனாவை தடுக்கும் என்பதை உறுதியாகியுள்ளது.


கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவத் தொடங்கி விட்டால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதால், இப்போது பிரதமர் அறிவுறுத்தியவாறு, நாளை மறுநாள் இந்திய மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இதை ஒரு நாளுக்கான செயல்பாட்டாக கருதாமல், அடுத்த ஒரு மாதத்திற்கு வாய்ப்புள்ள அனைத்து நாட்களிலும் கூடுமானவ்ரை ஊரடங்கை கடைபிடிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்புக்காக மத்திய,  மாநில அரசுகள் எடுக்கும் அனித்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.


அதேபோல், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரம் சார்ந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து, சாத்தியமுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்