காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மத்திய அரசு. இதற்கு திமுக உள்பட எதிர்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.


மேலும், ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டது மிகவும் துணிச்சலானது என பாராட்டு தெரிவித்திருந்தார். அது போல் கமல், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “காஷ்மீரை போல தமிழகத்தையும் இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள். வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து, சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம். ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதே கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.