சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழக அரசின் கீழ் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து டாஸ்மாக் குறித்து கடைகள் திறப்பு என வெளியான செய்தி உண்மை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள்  திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமில்லாமல் டாஸ்மாக் நிறுவனம் தரப்பிலும் தவறான செய்தி குறித்து விளக்கமளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாளை முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்ற செய்தி உண்மை இல்லை. அது தவறான செய்திகள். அதை யாரும் நம்ப வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலில் அறிவித்தப்படியே ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது எனவும் நிர்வாகம் தெரிவித்தது.


 நாட்டில் கோவிட் -19 பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக தமிழ் நாட்டில் லாக்-டவுன் அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான (Tasmac) கடைகளும் மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டது. ஏனென்றால் பிரதமர் மோடி, ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். 


இந்த 21 நாட்கள் லாக்-டவுன் (Lackdown) நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு, ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.