சில்லரை காசுகளுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்
நாளை இறுதி நாள் என்பதால் அனைத்து கட்சிகளிலும் உள்ள பெரும்பாலான முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
17வது மக்களவை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. மக்களவையை தேர்தலுடன் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தமிழகம், புதுவை என மொத்தம் 40 தொகுதிக்கான மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 20 தொகுதிக்கான வேட்பாளர்களையும் இரண்டு கட்சிகளும் அறிவித்துவிட்டது. அதேபோல இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டது. அதேபோல மற்ற கட்சிகளும் தங்கள் போட்டியிடும் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
17வது மக்களவை தேர்தலின் 2வது கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்க்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கியது. நாளையுடன் (மார்ச் 26) வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது.
நாளை இறுதி நாள் என்பதால் அனைத்து கட்சிகளிலும் உள்ள பெரும்பாலான முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தொல்.திருமாவளவன், கனிமொழி, திருநாவுக்கரசர், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பலர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
அப்பொழுது தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சில்லரை காசுகளுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். அங்கிருந்தவர்கள் அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தனர். இதே தென்சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெ.ஜெயவர்தன், திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அ.தி.மு.க-வின் ஜெ. ஜெயவர்தன் 4,38,404 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 29 ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை 5 மணிக்கு பிறகு 40 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.