Exit Poll Result Latest News Updates: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் செவ்வாய்கிழமை அன்று (அக். 8) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதேபோன்று, யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரிலும் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
ஹரியானா (Haryana) மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் (Jammu and Kashmir) மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன. முதல் கட்டமாக கடந்த செப். 18ஆம் தேதி அன்று 24 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக கடந்த செப். 25ஆம் தேதி அன்று 26 தொகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக கடந்த அக். 1ஆம் தேதி அன்று 40 தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அரசியலமைப்பு சட்டம் 370ஆவது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதன் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்தானது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன. இதன்பின்னர் இங்கு தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற்றன. அதன்பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க | காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை: ராகுல் காந்தி
தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 63.88 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து ஜம்மு & காஷ்மீர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. தொடர்ந்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நிறைவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முடுக்கிவிட்டன. தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. மேலும் இம்முறை மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டுள்ளன. இந்நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முடிவுகளை இங்கு காணலாம்.
ஹரியானா: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
India Today-CVoter, News 14, Repubic TV-P Marq, Times Now உள்ளிட்டவை ஹரியானா குறித்து வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைத்தும் காங்கிரஸ் கட்சியே 50+ தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்துள்ளன. India Today-CVoter: காங்கிரஸ்: 50-58, பாஜக: 20-28 மற்றவை: 0-14; Repubic TV-P Marq: காங்கிரஸ்: 55-62, பாஜக: 18-24, மற்றவை: 2-5; Times Now: காங்கிரஸ்: 50-64, பாஜக: 22-32, மற்றவை: 2-8; News 14: காங்கிரஸ்: 55-62, பாஜக: 18-24, மற்றவை: 2-5. கடந்த தேர்தலிலும் பாஜகதான் வெற்றிபெறும் என பல கருத்துக்கணிப்புகள் சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பிருப்பதாகவே பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை (46 தொகுதிகள்) கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது. மும்முனை போட்டி நிலவுவதால் இங்கு தொங்கு சட்டப்பேரவை அமைய அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். India Today-C Voter: பாஜக: 27 –32, காங்கிரஸ் கூட்டணி: 40–48, பிடிபி: 6 –12, மற்றவை: 6 –11 என கணித்துள்ளது; Axis My India:பாஜக: 24–34, காங்கிரஸ் கூட்டணி: 35–45, பிடிபி: 4–6, மற்றவை 8–23; Dainik Bhaskar: பாஜக:20– 25, காங்கிரஸ் கூட்டணி:35–40, பிடிபி: 4–7, மற்றவை: 12–16
மேலும் படிக்க | 3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்... மகாராஷ்டிராவில் ஷாக் - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ