முடியட்டும் பாசிச ஆட்சி, விடியட்டும் மக்களாட்சி: கரூரில் ஸ்டாலின் பிரச்சாரம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது,
வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மத்தியில் மோடி தலைமையில் அமைந்துள்ள பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தலாக இருக்கும் என்றார். கரூர் மக்களவை தொகுதி போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவு தரவேண்டும். அவருக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும். இந்த வெற்றி மூலம் நாம் விரும்பும் நல்ல ஆட்சி மத்தியில் அமையும். அதற்காக தான் உங்களிடம் ஓட்டு கேட்ட வந்துள்ளேன். தற்போது கலைஞர் இல்லை. அவரின் மகனாக உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். இது கரூர் மட்டுமில்லை. இது கழகத்தின் ஊர் எனக் கூறினார்.
நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற அந்த முழக்கத்தோடு நம் கையில் மாநில ஆட்சி, நாம் கை காட்டுவதே மத்தியில் ஆட்சி. முடியட்டும் இந்த பாசிச ஆட்சி, விடியட்டும் மக்களாட்சி என்ற குரலோடு திருவாரூரிலே கடந்த 20 ஆம் தேதி, நான் என் பயணத்தை துவக்கினேன். தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூரில் இருந்து பயணத்தை தொடங்கினேன்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட உள்ளது. நாட்டிலே நல்ல ஆட்சியை உருவாக்க கை சின்னத்தில் போட்டியிடும் ஜோதிமணிக்கு கரூர் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
அண்மையில் மத்திய நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பங்கேற்று அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகராக இருக்க கூடிய தம்பிதுரை மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். ஜிஎஸ்டி மூலம் மாநிலத்தை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது மத்திய அரசு என்று கூறினார் தம்பிதுரை. ஆனால் தற்போது தாம் குறை கூறிய பாரதிய ஜனதாவின் துணையுடனேயே வேட்பாளராக கரூர் தொகுதியில் தம்பிதுரை நிறுத்தப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.