2024-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் இருக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் தேர்வு இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்தும் - அதற்குத் துணைபோகும் ஆணவம் பிடித்த ஆளுநரைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசியல் கோரிக்கையல்ல, அது கல்விக் கோரிக்கை. அதிலும் குறிப்பாக, சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை. நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் கோரிக்கையல்ல, அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் இன்று மாறி இருக்கிறது.
மேலும் படிக்க | மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு: காலவகாசம் கேட்கும் மக்கள்
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது நாம் சிலர் தான். ஆனால் இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது. மிக உறுதியாகக் கூறுகிறேன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன். ஒன்றியத்தின் புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம். அந்த வலிமையும் உறுதியும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு.
இப்படி ஒரு வாக்குறுதியை அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் தர முடியுமா?. ஏழை - எளிய - விளிம்பு நிலை - நடுத்தர - ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதுதான் பா.ஜ.க.வின் உண்மையான நோக்கம். ஊழலுக்கு எதிரானவர்களைப் போல நடித்துக் கொண்டு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடிகளில் புரளப் பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருப்பது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி. இவர்களது ஊழல் வண்டவாளங்கள்தான் சி.ஏ.ஜி. அறிக்கையில் சிரிப்பாய் சிரிக்கிறதே!
தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கவும் - அப்பாவி மக்களை நசுக்கவும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் நடத்தப்படும் நீட் தேர்வை அ.தி.மு.க.வின் அடிமை ஆட்சிக்காலம் ஆரம்பக் காலத்திலேயே எதிர்த்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. பா.ஜ.க.வின் பாதம்தாங்கிகளான அடிமை அ.தி.மு.க. கூட்டம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஒன்றிய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட தகவலையே சட்டமன்றத்திற்குச் சொல்லாமல் வாயைப் பொத்திக் கிடந்தது. தங்களது நாற்காலி காப்பாற்றப்பட்டால் போதும் யார் நாசமானால் என்ன என்று நினைத்து தரையில் விழுந்து கிடந்தார்கள்.
அரியலூர் அனிதா தொடங்கி - குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரைக் குடித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது. நாடாளுமன்றத்திலும் - சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் போராடிய நாங்கள், அமைய இருக்கும் புதிய ஒன்றிய ஆட்சியின் மூலமாக வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வைப்போம். என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பிக்கை இழக்கவில்லை. நீட் என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்புச் சட்டமல்ல. அரசியலமைப்புச் சட்டத்தையே காலில் போட்டு மிதித்தவர்கள் ஒன்றிய பா.ஜ.க.வினர். எனவே, நீட் தேர்வும் ரத்தாகும். நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | நீட்: அதிமுக பச்சை துரோகம் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் - விளாசிய திருச்சி சிவா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ