பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும்!
மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019-ஆம் ஜனவரி மாதம் முதல் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மேலும் பிஸ்கட் மற்றும் சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே பொதிந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக்குக்கு விலக்களித்து அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை சட்டவிரோதமானது, பன்னாட்டு நிறுவனங்களையும் மொத்த விற்பனை நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது,
இந்நிலையல் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அரசாணைகள் மாநில உயர் நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளன என்றும் தெரிவித்தார். ஏற்கனவே பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அரசாணை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, மறு சுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, விநியோகம் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதித்த தமிழக அரசாணை செல்லும் எனவும் அரசாணையை எதிர்த்து தொடர்ந்த அனைத்து மனுகளையும் தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.