ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை!
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பணிபுரிந்துவரும் இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவது மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணி நிரவல் தொடர்பான கலந்தாய்வு தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
இது தொடர்பான அரசாணையினை கடந்த மாதம் 20-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்திருந்தது. இந்த அறிவிப்பாணையில் 2017 ஜூன் 1-ஆம் தேதிக்கு பின்னர் பதவி உயர்வு பெற்றவர்களும், 2019 ஜூன் 1-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி இருக்கும் ஆசிரியர்களும் மட்டுமே பணி மாற்றும், பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த அரசாணை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என தெரிவித்து அதை ரத்து செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்த போது, அருகில் உள்ள பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தும் இந்த நிபந்தனைக்களால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இடைநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் ஆண்டுதோறும் நடைப்பெறும் கலந்தாய்வில் அனுமதிக்கப்படும் போது மனுதாரர்களுக்கு கட் ஆஃப் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்களை விட இளையவர்கள் கலந்தாய்வில் முன்னதாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நாளை முதல் துவங்க உள்ள கலந்தாய்வை தள்ளி வைக்க உத்தரவு பிரப்பித்துள்ளார். மேலும் பணிஇட மாறுதல் தொடர்பான பள்ளிக்கல்வி துறையின் அரசாணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிரப்பித்துள்ளார்.