கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் எங்கே...? மறைத்தால் தண்டனைதான் - பெற்றோருக்கு நீதிபதி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவியிடம் செல்போன் இருந்து அதனை ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்கும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்து நியாயமான விசாரணை கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று (டிச. 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.
நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடிவடையும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்: செந்தில் பாலாஜி
அப்போது, உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில், பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவர்களின் அறிக்கை ஆகியவை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும், விடுதி வார்டனின் செல்போனில் இருந்தே பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது, ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும். மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா, இல்லையா?" எனவும் கேள்வி எழுப்பினார்.
அதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவி தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் சட்டப்படி குற்றம் எனவும் அதற்காக பெற்றோரை விசாரிக்கும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார். செல்போன் இருந்தால் உடனடியாக அதனை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு... ரூ.3000 வழங்குக - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ