Pongal 2025: போகி முதல் காணும் பொங்கல் வரை... தெரிந்துகொள்ள வேண்டிய சடங்குகள்!

Pongal 2025 Days List: பொங்கல் 2025 பண்டிகை, போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் நிலையில், இந்த நாள்களில் செய்ய வேண்டிய சடங்குகள் குறித்து இங்கு காணலாம்.

Harvest Festival: பொங்கல் பண்டிகை (Pongal 2025) தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கும் இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் அறுவடை திருநாளான பொங்கலை போன்று பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயரில் அறுவடை திருவிழா இதே நேரத்தில் நடைபெறுகின்றன.

 

1 /8

தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் ஆகும். நான்கு நாள்கள் வரை கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருவிழா, உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

2 /8

மார்கழி 30ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். தை முதல் நாள் அன்று சூரிய பொங்கல் கொண்டாப்படுகிறது. தை 2, 3 ஆகிய தினங்களில் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

3 /8

அந்த வகையில், அறுவடை திருவிழாவான இந்த பொங்கல் பண்டிகையின் 4 தினங்களிலும் மக்கள் செய்ய வேண்டியவை என்ன, கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.   

4 /8

போகி பண்டிகை: வரும் ஜன. 13ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தைத்திருநாளுக்கு முந்தைய நாள், உங்களின் பழைய தீய சிந்தனைகள், நினைவுகளை விட்டொழித்து தமிழர் திருநாளை வரவேற்கும் வகையில் இந்த போகி பண்டிகை அமைந்துள்ளது. வீடுகளை கழுவி சுத்தம் செய்து, வீடுகளில் தோரணம் கட்டி அலங்கரித்து, மண் பானைகளை சுத்தம் செய்து பொங்கல் பண்டிகையை வரவேற்க தயாராவார்கள். போகியின் போது தீயினை போட்டி பழைய பொருள்கள், டயர்கள், பிளாஸ்டிக் ஆகியற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான சுற்றுச்சூழலுடன் போகியை கொண்டாடுங்கள்.  

5 /8

சூரிய பொங்கல்: தை மாதத்தின் முதல் நாள், வரும் ஜன. 14ஆம் தேதி சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானை போற்றி, அன்று சூரிய உதயத்தின்போது பொங்கல் வைப்பார்கள். மண் பானையில் மஞ்சள் குலையை கட்டி, பனை ஓலை மூலம் தீயை மூட்டி பொங்கல் வைக்கலாம். காய்கறிகள், கிழங்குகள் ஆகியவற்றுடன் பொங்கலையும் வைத்து சூரியனுக்கு படைப்பார்கள். ஜன. 14ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டும் நடைபெறும்.   

6 /8

மாட்டு பொங்கல்: வீட்டில் உள்ள கால்நடைகளை போற்றும் வகையில், இந்த பண்டிகை தை 2ஆம் நாள் (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. மாடுகளுக்கு புது மூக்கணாங்கயிறை மாற்றுவார்கள். கொம்புகளில் வர்ணம் பூசுவார்கள். மாலை அணிவித்து மாடுகளுக்கு பூஜை செய்வார்கள். தங்களின் பணிக்கு உழைப்பை கொட்டும் மாடுகளை போற்றும் வகையில் விவசாய பெருங்குடிகள் இந்த மாட்டு பொங்கலை கொண்டாடுவார்கள். ஜன. 15ஆம் தேதி மதுரை பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டும் நடைபெறும்.   

7 /8

காணும் பொங்கல்: ஜன.16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும். இந்த தினத்தில் மக்கள் தங்களின் குடும்பங்களுடன், நண்பர்களுடன், நெருக்கமானவர்களுடன் சுற்றுலா செல்வார்கள். இதன்மூலம் உறவுகளுக்குள் அன்பும், மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகமாகும். குடும்பங்கள் ஒன்றுகூடி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி, பரிசுகளை பரிமாறிகொள்ளும் வழக்கமும் இருக்கிறது. ஜன. 15ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டும் நடைபெறும்.   

8 /8

போகி பண்டிகையை தவிர்த்து மற்ற மூன்று நாள்களும் அரசு விடுமுறை ஆகும். அதே நேரத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து ஜன. 17, 18, 19 ஆகிய மூன்று நாள்களும் விடுமுறைதான் என்பதால் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இந்தாண்டும் திட்டமிடலாம்.