மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 மாதங்களில் துவங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் துவங்கும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனை ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். மேலும் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர், மள்ளப்புரம் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையங்களைத் துவங்கி வைத்தார். பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளைப் பார்வையிட்டார்.
பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இன்னுயிர் காப்போம் திட்டத்தைப் பொறுத்தவரை 96 ஆயிரத்து 807 பேர் விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இதில் பல ஆயிரக்கணக்கான பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இது போன்று விபத்துகளில் சிக்கியவர்களுக்காக கடந்த 8 மாதங்களில் தமிழக அரசால் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.87 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரத்து 609 ஆகும். தமிழகம் முழுவதும் 680க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த சிகிச்சையை வழங்கியுள்ளன. இந்தாண்டு நிதிநிலை அறிக்கையின் மூலம் மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 23 அறிவிப்புகளின் மூலம் 110 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க அன்பில் மகேஷ் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!
கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. தமிழக அரசு மேற்கொண்ட கடும் முயற்சியின் காரணமாய் கடந்த நான்கைந்து மாதங்களாக கரோனாவால் ஏற்படுகின்ற உயிரிழப்பு இல்லை என்ற நிலையை எட்ட முடிந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி போடுவதில் தமிழகம் நல்ல நிலையை எட்டியிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 95.5 சதவிகிதமாகும். 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 88.52 சதவிகிதமாகும். மாநில அளவில் 95.51 சதவிகிதமாக இருந்தாலும், மதுரையைப் பொறுத்தவரை முறையே 86.20 மற்றும் 75.08 சதவிகிதமாகவே உள்ளது. இதனை அதிகப்படுத்துவதற்கான பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
குரங்கம்மையைப் பொறுத்தவரை, உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி தற்போது வரை 72 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, தெலங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் முதல் குரங்கம்மை பாதிப்பு என்றவுடன் தமிழக முதல்வர் இங்குள்ள பன்னாட்டு விமான நிலைங்களை ஆய்வு செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு முறைப்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை. அமெரிக்காவிலிருந்து வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிறுவனுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு சிறுவனுக்கும் குரங்கம்மை போன்ற அறிகுறிகள் இருந்தன. ஆனால் சோதனையின் முடிவில் குரங்கம்மை இல்லை என்று வந்துள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன. ஆகையால் பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை. இதுகுறித்து ஏதேனும் புகார் இருந்து கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைப் பொறுத்தவரை தமிழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக தற்போது ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது முதல் கட்ட மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. கட்டட வடிவமைப்புக் குறித்த ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் வடிவமைப்புக்கான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த ஏழு மாதங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கலாம் என்றார்.
இந்த ஆய்வுப் பணிகளின் போது தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க | உடல் உறுப்புகள் தானம் மூலம் 'தனயனை காத்த தாய்'
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ