பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்காக புதிய அரசாணையை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


பொள்ளாச்சியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றது. 


பாதிக்கப்பட்ட விபரங்களை வெளியிட்டதற்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்காக புதிய அரசாணையை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சி பெண்களின் ஆபாச வீடியோவை இணையதளங்களில் இருந்து நீக்கவும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைத்து, சிபிஐக்கு மாற்றும் அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.