பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் H.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை அவமதித்தும் இழிவான சொற்களில் விமர்சித்தார். அந்த தகராறு தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 


இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழக துணை தலைவரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான துரைசாமி,"மத்தியில் ஆளும் பாஜக-வின் தேசிய செயலாளர் என்பதால் H.ராஜா-வுக்கு எதிரான வழக்கை விசாரிக்க காவல்துறை தயங்குகிறது. ஆகவே வழக்கை விசாரித்து, விரைவில் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறி நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, திருமயம் காவல் ஆய்வாளர் 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


முன்னதாக.,  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய செயலாளர் H.ராஜா "ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணிதான் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும், திகவுடனான தொடர்புகளை திமுக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., "திராவிட கழகத்தில் நிலைமை தற்போது ஆப்பசைத்த குரங்குபோல் உள்ளது. ஈவெரா அன்றைக்கு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. வழக்குக்கு சென்றால் அவர்கள்தான் உள்ளே செல்வார்கள்.


இந்து கடவுளை இழிவுப்படுத்தி எதிர்ப்புகளை பெற்ற வீரமணி மன்னிப்பு கேட்காதபோது, நாகரிகம், பண்பாடு குறித்து ரஜினிக்கு பாடம் எடுக்கலாமா வீரமணி?  அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. திகவுடனான தொடர்பை திமுக முறிக்கவில்லை என்றால் விரைவில் மிக பெரிய விளைவுகளை சந்திக்கும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது  H.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.