மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும்...
மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டுமென்று மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்!
மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டுமென்று மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்!
இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனிதகுல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பையும் செலுத்திய நகரான மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மக்களவையில் அவர் பேசுகையில் "மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரை வெறும் நகரமல்ல; அது தமிழ்ப்பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரிகத்தின் தாயகம். உலகில் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு இன்றைக்கும் வாழும் நகரமாக இருப்பது மதுரை” என தெரிவித்துள்ளார்.
மேலும், “சமீபத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை மதுரைக்கு அருகில் கீழடியில் நிகழ்த்திய அகழாய்வில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எண்ணற்ற பொருட்களும் தொல்பழம் நாகரீகத்தின் சான்றுகளும் கிடைத்திருக்கிறது. அதில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் இந்த நாகரீகத்தின் சான்றை இன்றைக்கு உலகத்திற்கு முன்பு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
உலகில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்கள் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 12 இடங்களில் கிடைக்கின்ற ஒரே உலக நகரமாக மதுரை என்பதை குறித்து காட்ட விரும்புகின்றேன்.
இந்த நகரம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனிதகுல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பையும் செலுத்திய நகரமாகும். எனவே மதுரையை உலக பாரம்பரிய நகரமாக - வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.