மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்கும் எதிரான நிலைப்பாடே கொண்டுள்ளது :கமல்
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் விவசாயிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து விவசாய சங்க அமைப்புகளில் இருந்து பல்வேறு விவசாயிகள் கமல்ஹாசனை சந்தித்தனர்.
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் விவசாயிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து விவசாய சங்க அமைப்புகளில் இருந்து பல்வேறு விவசாயிகள் கமல்ஹாசனை சந்தித்தனர். பின்னர் அவர்களுக்கு மதிய உணவு அளித்து அன்புடன் உபசரித்தார்.
பின்னர் விவசாயிகள் மத்தியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியது,
> விவசாயிகளின் கண்ணீரை உணர்ந்தவன் நான். விவசாயி எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் ஒன்று தான்.
> அனைத்து விவசாயிகளும் சகோதரர்களே, தோளில் பச்சைத்துண்டு போடாத விவசாயி என்று என்னை சொன்னார்கள். ஆனால் நான் எனது மனதில் பச்சை துண்டு போட்டுள்ளேன்.
> 10,000 கோடி கடன் வாங்கியவர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள், ஆனால் ஏழை விவசாயி இங்கே சிரமப்படுகிறான்.
> மண்ணுக்கடியில் தங்கமும் வைரமும் இருந்தாலும் அதை அப்படியே விட்டு வைத்து அதன் மீது விவசாயம் செய்யும் சமூகமே வளர்ச்சி அடையும்.
> ஏழாயிரம் வருடமாக மண்ணோடு காதல் செய்து வருபவன் விவசாயி, அந்த மண் மீதான காதல் முறிந்து விடுமோ என்ற கவலையில் தற்கொலை செய்து கொள்கிறான் விவசாயி
> விவசாய நாடு என்று சொல்வதில் அவமானம் இல்லை. அது நமக்கு பெருமை தான். படிப்பை பாதியில் விட்டவன் ஆனால் சோறு நிறைய சாப்பிட்டவன் அதனால் அதிகமாக அறிவு வளர்ந்துள்ளது.
> விவசாயிக்கு ஒரே மதம், அவனுக்கு வேற சாதி இல்லை. இந்த விவசாயக்குடும்பத்தில் நானும் சேர்வதில் எனக்கு பெருமை.
> மத்திய மாநில அரசு இரண்டுமே விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எதிரான நிலைப்பாடே கொண்டிருக்கின்றனர்
> அரசு, ஏழைகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் நிதிக்கொள்கை வகுத்து வருகின்றனர். தங்க பிஸ்கட்டிற்கு குறைந்த வரி ஆனால் சாப்பிடும் பிஸ்கட்டிற்கு கூடுதல் வரி.
> மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விவசாயிகள் நன்றி சொல்லும் காலம் வரும். பயிர்காப்பீடு தனி நபர்களுக்கும் வழங்கப்படும் காலம் வரும்.
> ஆற்று மணலைத் திருடுவதால் தான் விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் குறைந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது தற்கொலை இல்லை இது கொலையே.
> டிசம்பர் மாதம் விவசாயிகள் கூட்டம் நடத்துவோம். ஆட்சியில் இருப்பவர்கள் நம்மைக்கண்டு அமைதியான முறையில், ஆனால் அழுத்தமான முறையில் நடத்திக்காட்டுவோம்
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.