மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு: கமல்ஹாசன்
மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. #தாங்குமாதமிழகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் அரசின் முடிவை சரியானது அல்ல என பல தரப்பினரும் எதிப்பு தெரிவித்தனர். பெண்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் இருந்த பல போட்டோக்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியது, "முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8 ஆம் இடத்திலிருந்து 2 ஆம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மே 7 ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில், நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், "அரசின் கையாளாகாத தனத்தை திசைதிருப்பே மதுபான கடைகள் திறக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.