சென்னை: நீங்கள் சென்னைவாசியாக இருந்தால், கடந்த லாக்டௌன் நாட்களில் வெளியே சென்றிருந்தால், இந்த காரையும் இந்த மனிதரையும் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். காரை ஓட்டிக்கொண்டு அடிக்கடி கண்ணில் படும் இவர் சென்னையின் கொரோனா போர்வீரரான ப்ரீஜோ டி.ஜே. (Preejo TJ). முதல் லாக்டௌன் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீடற்ற மக்கள் மற்றும் ஆதரவற்றோர் எதிர்கொள்ளும் பல கஷ்டங்களை பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. சிலர் அவர்களுக்காக வருத்தப்பட்டனர். சிலர் வேண்டிக்கொண்டனர். ஆனால், இவரோ, நேரத்தை வீணாக்காமல், தனது மாமாவின் காரை கடன் வாங்கி நிவாரணப் பணிகளைச் செய்யத் தொடங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“முதல் லாக்டௌன் முதல் சமீபத்தியது வரை, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் (GCC) அனுமதியுடன் தேவைப்படும், வீடற்ற மக்களுக்கு உணவையும் உணவுப் பொருட்களையும் அளித்து என்னால் ஆன உதவியை செய்து வருகிறேன். தெரு நாய்களுக்கும் உணவு வழங்கி வருகிறேன். சென்னை முழுவதும் வீடற்ற மக்களுக்கு உணவு வழங்கி இந்தப் பணியை நான் முதலில் துவக்கினேன். லாக்டௌனின் ஆரம்ப நாட்களில், தன்னார்வலர்களோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அதிகமாக இந்த பணியில் ஈடுபடவில்லை. முதலில், சேரிப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, ரேஷன் கார்டு இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், இருலா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என இவர்களுக்கு உதவிகளையும் தேவையான வசதிக்கான ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினேன்” என்று அவர் கூறுகிறார்.


இந்த இளைஞர் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் நிவாரணப் பணிகளில் செலவழித்து நகரத்தில் சுமார் 1,75,000 மக்களுக்கு உதவியுள்ளார். "நான்காவது லாக்டௌனுக்குப் பிறகு, எனது கவனம் புலம்பெயர்ந்தோர் மீது மட்டுமே இருந்தது - ஏராளமான புலம்பெயர்ந்தோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை நோக்கி வரத் தொடங்கினர். நான் நெடுஞ்சாலைகளுக்கு வண்டியை ஓட்டிச் சென்று அவர்களை மாநகராட்சியின் வெவ்வேறு முகாம்களுக்கு அழைத்து வந்து விடும் பணியைத் தொடங்கினேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல டிக்கெட் கிடைத்ததையும் நான் உறுதி செய்தேன்” என்று பிரீஜோ பகிர்ந்து கொள்கிறார்.


ப்ரீஜோ தனது நண்பர்களின் உதவியுடன் சுமார் 14 லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார். தனது இந்த வேலையின் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், “இரண்டாவது லாக்டௌனுக்குப் பிறகு, நான் பாரிஸ் வழியாகச் சென்றேன். எனது கார் அந்த இடத்தை அடைந்ததும், சுமார் 70 பேர் என்னை நோக்கி ஓடி வரத் தொடங்கினர். இதுபோன்ற பல சம்பவங்கள் லாக்டௌன் 1 மற்றும் 2 இன் போது நிகழ்ந்தன” என்று குறிப்பிடுகிறார். இவற்றை குறிப்பிடும் போது அவர் உணர்ச்சிவசப்படுகிறார்.


ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!


லாக்டௌனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொழுதைக் கழித்துள்ளனர். சிலர், தங்களுக்கான திறமைகளை வளர்த்துக்கொண்டனர். ப்ரீஜோ போன்ற சிலரோ மற்றவர்களுக்கான சுமையை குறைக்க முயன்றனர்.


லாக்டௌனில் நகரம் எப்படி இருக்கிறது என இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு உலா வந்த நேரத்தில், லாக்டௌனால் தவித்த மக்களின் துயரத்தை தன் துயரமாய் எண்ணிக்கொண்டு அவர்கள் துயர் துடைக்க வீதிக்கு வந்து உதவிய ப்ரீஜோ போன்றவர்கள் இருக்கும் வரை மனித குலம் குறையின்றி வாழும்!!


ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!