`ஸ்டாலின் யாருனு தெரியாது... விஜய்யை தெரியும்` சென்னையில் மனு பாக்கர் சொன்ன பதில்!
Manu Bhaker Chennai Visit: ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
Manu Bhaker Chennai Visit Latest News: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு சென்னை நொலம்பூரில் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் பாராட்டு விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மனு பாக்கர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் வேலம்மாள் பள்ளியில் பயிலும் 2302 மாணவர்களுக்கு, ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் நோக்குடன், வேலம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த வருடத்திற்கான ஊக்கத் தொகையாக மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு மனு பாக்கர் பதில் அளித்தார். பிரதமர் உங்களை போனில் அழைத்து பேசியது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு, "பிரதமர் என்னை அழைத்து பதக்கம் வென்றதற்காக பாராட்டினர், வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இது எனக்கு மிகவும் பெருமையான தருணம் ஆகும். நான் வெள்ளிப் பதக்கம் வெல்வேன் என எதிர்பார்த்தேன், ஆனால் வெண்கலம்தான் கிடைத்தது. சிறிய புள்ளி அளவில்தான் வெள்ளிப் பதக்கத்தை தவற விட்டேன். இருப்பினும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
விஜய் - அவர் ஒரு டார்லிங்
கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டையும் எவ்வாறு சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு, "நான் கல்வியையும் விட்டுக்கொடுக்கவில்லை, விளையாட்டையும் விட்டுக்கொடுக்கவில்லை. நீங்கள்தான் உங்கள் கல்வி மற்றும் விளையாட்டை சரி சமமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். எனது பெற்றோர் நான் கல்வி பயில்வதை எனது மதிப்பெண் அட்டை மூலமாக கண்காணித்து கொண்டே இருப்பார்கள். கல்விக்கும், விளையாட்டுக்கும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்க என்னை தூண்டினார்கள்" என்றார்.
மேலும் படிக்க | நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்கிறாரா மனுபாக்கர் - அவரது தந்தை பதில்
தமிழக முதல்வர் ஸ்டாலினை உங்களுக்கு தெரியுமா என மனு பாக்கரிடம் மாணவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் தெரியாது என பதில் அளித்தார். பிரக்ஞானந்தாவை தெரியுமா என்ற கேள்விக்கு, "நன்றாக தெரியும்" என்றார். உடனே நடிகர் விஜய்யை தெரியுமா என்ற கேள்விக்கு, "விஜய்யை தெரியும்" எனவும் அவர் பதில் அளித்தார். மேலும் He is a Darling என்றும் விஜய் குறித்து குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்சுடுதல் மீதான ஆர்வம்
உங்களுக்கு பிடித்த தென்னிந்திய உணவு எது என்ற கேள்விக்கு, "எனக்கு பொங்கல் மிகவும் பிடிக்கும், எனது வீட்டில் எனது அம்மா சமைக்கும் தோசை மிகவும் பிடிக்கும்" என்றார். உங்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் எப்படி ஆர்வம் வந்தது என்று மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு, "எனக்கு பள்ளிப் பருவத்தில்தான் துப்பாக்கிச்சுடுதல் மீது ஆர்வம் வந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்து தான் தேசிய துப்பாக்கிச்சுடுதல் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது.
என் உடல் வலிமையை மூலம் குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்த நான், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதுதான் எனது முதல் படி" என்றார். துப்பாக்கிச்சுடுதலில் யாரை உங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, "மற்றொருவரை போல வர முயற்சி செய்ய வேண்டாம். உங்களுக்கு எது நன்றாக வருகிறதோ, அதை எடுத்துக் கொண்டு நீங்கள் நீங்களாக உங்கள் அடையாளத்தை பொதுவெளியில் நிரூபிக்க வேண்டும். மற்றொருவரை பார்த்து காப்பி அடிக்க வேண்டாம். ஆனால் ஒருவரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை" என்றார்.
மேலும் படிக்க | Paris Olympics: 124 ஆண்டு சாதனையை சமன் செய்த மனு பாக்கர்!'
தோல்விகளால் வெற்றி அடைந்தேன்
கேள்வி - பதில் அமர்வுக்கு பின்னர் மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசிய மனு பாக்கர்,"கடுமையான உழைப்பு இருந்தால் பெரியளவில் சாதிக்கலாம். பெரிய கனவு காண்பது மூலம் பெரிய இலக்கை அடையலாம். தோல்வியிலும் தளராமல் இருக்க வேண்டும். பள்ளி பருவத்திலேயே நான் போட்டிகளில் கலந்து கொள்ள தொடங்கினேன். முதலில் வீட்டிலும் அடுத்து பள்ளியிலும் நமக்கு ஆதரவு இருக்க வேண்டும், அது எனக்கு கிடைத்தது.
பொதுவாகவே நிறையா வேலை வாய்ப்பு உள்ளது. மருத்துவர், பொறியாளர் மட்டுமே படிப்பு அல்ல. அதை தாண்டி நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக விளையாட்டு துறையிலும் வேலை வாய்ப்பு உள்ளது, உலகம் சுற்ற ஆசைப்படுபவர்கள் விளையாட்டு துறையயை தேர்வு செய்யுங்கள், பாதி உலகத்தை நான் சுற்றிவிட்டேன்.
எப்போதும் நமது பின்புலம் பற்றி அவமானப்பட வேண்டாம். நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல, எனக்கு ஆங்கிலம் பேச தெரியாது. பல விஷயங்கள் தெரியாமல் இருந்தேன். பிறகு கற்று கொண்டேன், கற்று கொடுத்தார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டபோது மிகவும் பதட்டமடைந்தேன். தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை புறந்தள்ளி வெற்றி பெற வேண்டியிருந்தது, தோல்விகள் பல அடைந்ததால்தான் என்னால் வெற்றி அடைய முடிந்தது" என்றார். முன்னதாக, மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹிந்தி பாடலை பாடியும், மற்றொரு ஹிந்தி பாடலுக்கு நடனமும் ஆடினார்.
நம் நாட்டில் செய்ய வேண்டியது இதுதான்!
இந்நிகழ்ச்சியை அடுத்து மனு பாக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உங்கள் வெற்றிக்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு, "ஒரு நபர் மட்டுமே எனது வெற்றிக்கு காரணம் இல்லை. என் குடும்பம், பயிற்சியாளர் பால், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பலரின் பங்களிப்பு, நம் நாட்டிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்க மிகப்பெரிய காரணமாக இருந்தது" என்றார்.
ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஆம் பல நாடுகள் நம்மை விட முன்னிலை வகிக்கின்றன. நாம் அனைவரும் பதக்கப் பட்டியலை உயர்த்தும் நம்பிக்கையுடன் இருப்போம். மற்ற நாடுகளிடம் ஒன்று உள்ளது, அவர்கள் குழந்தைகளை இளவயதிலேயே விளையாட்டு துறையில் முன்னோக்கி செல்ல செய்கிறார்கள். நம் நாட்டிலும் அந்த வகையான திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும், அதுவே சிறந்ததாக இருக்கும்" என பேசினார்.
பெண்களின் பாதுகாப்பு
தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய மனு பாக்கர், "பெண்களைப் பற்றிப் பேசினால், பெண்கள் நம் நாட்டின் 50 சதவீத மக்கள் தொகை ஆவார். அடிப்படை உரிமை என்பது சுதந்திரத்தின் அடிப்படையில் தான் கிடைக்கிறது. பெண்களுக்காக சமூகத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு நபரின் கடமையாக இது இருப்பது அவசியம். நாம் அனைவரும் இணைந்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நாம் முன்னேற்ற பாதையில் உள்ளோம்" என பதிலளித்தார்.
வினேஷ் போகத் ஒரு போராளி
மேலும் வினேஷ் போகத் எடைச் சர்ச்சை குறித்து பேசிய மனு பாக்கர், "அவர் எனக்கு மூத்த சகோதரி போன்று மரியாதையானவர், அவரிடம் எனக்கு நல்ல மரியாதை உள்ளது. என்னை விடவும் வயதில் பெரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். அவர் எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர். அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார்" என்றார்.
இறுதியாக மனுபாகரின் அடுத்த கட்ட பயணம் குறித்த கேள்விக்கு, "நான் தற்போது ஓய்வெடுக்க விரும்புகிறேன், தற்போதைக்கு மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளேன். 4 அல்லது 5 மாதங்கள் கழித்து மீண்டும் எனது பணியை தொடங்குவேன்" என்றார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் இந்திய வீராங்கனை மனு பாக்கர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ