ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைப்பு
மர்மநபர்களால் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைப்பு.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, ஆனால் நிரந்தர சட்டம் வேணும் என்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்களை வெளியேற்றும் பணியை போலீசார் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறார்கள். சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் போலீசார் மீது கையில் கிடைத்த பொருட்களை வீசினார்கள். போலீசார் மீது மணல், செருப்பு வீசப்பட்டது. திருவல்லிக்கேணி சாலைப் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது.
இந்த நிலையில் விவேகானந்தர் இல்லத்திற்கு பின்புறம் இருந்த ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதில் தீ காவல் நிலையத்திற்குள் மளமளவென பரவியது. வாகனங்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டன. கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்ற தீயணைப்பு வீரர்கள், காவல்நிலையத்திற்குள் இருந்த இரண்டு பெண் காவலர்களை மீட்டனர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தள்ளனர்.
அமைதியான முறையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், தற்போது சில தேவையில்லாத விஷமிகளால் வன்முறையாக மாறியுள்ளது என்பது கவலையளிக்கிறது.