அண்மையில் பெய்த பெரு மழையில், கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.,  "அண்மையில் பெய்த பெரு மழையில், கோவை மாவட்டம் - மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி, கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இருந்த 80 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் இடிந்து, அருகில் இருந்த நான்கு வீடுகளின் மீது சரிந்து விழுந்தது. இதனால் அந்த நான்கு வீடுகளும் சிதைந்து இடிந்து விழுந்து தரைமட்டமாகின.


விடியற்காலையில் இந்தக் கொடுமை நடைபெற்றதால், அந்த வீடுகளின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரை இழந்தார்கள் என்ற அதிர்ச்சி தரும் செய்தி நம் அனைவரையும் இடிகொண்டு தாக்குவதைப் போல நிலைகுலையச் செய்துவிட்டது. கனமழை பெய்து இருள் சூழ்ந்த நேரத்தில் ஏற்பட்டுவிட்ட இந்த சோக நிகழ்வு அருகில் உள்ளவர்களுக்கு தெரியவே நெடுநேரம் கடந்துவிட்டது.


தீயணைப்புப் படையினர் அங்கு வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும்போது மூன்று குழந்தைகள், மூன்று ஆண்கள், 11 பெண்கள் ஆகியோரைச் சடலங்களாக மீட்டது நம் நெஞ்சை பதை பதைக்கச் செய்கிறது. இவர்களை பறிகொடுத்த குடும்ப உறவுகளின் கதறல்கள் மனிதநேயம் கொண்டோரின் இதயங்களில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது.


ஆறுதல் சொல்வதற்கும், தேறுதல் சொல்வதற்கும் வார்த்தைகள் இல்லாமல், இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆறுதலை, உயிரைப் பறிகொடுத்த பரிதாபத்திற்குரிய உறவுகளுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


துயரத்தில் மூழ்கிக் கிடக்கின்ற அவர்களின் கண்ணீரைத் துடைத்து, தேவையான நிவாரணப் பணிகளை விரைந்து எடுத்து மனிதநேயத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.


இந்திய அரசு இவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு என்று ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. அவைகளை முறையாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலில் பாதுகாப்பான நல்ல வீடுகளை கட்டித் தரவும், பொருளாதார நிலையில் அவர்கள் மேம்பட பெருமளவு தொகையினை இழப்பீடாக வழங்கவும், அந்தக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கவும் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்ட அவர்கள் தேறுதல் பெற்று நிம்மதியாக வாழ்ந்திட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.


விபத்தில் உயிர் இழந்தோரின் சடலங்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யும்போது மருத்துவமனைக்கு வெளியே கிடத்தப்பட்டு இருந்ததையும், கோவை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய கொண்டு செல்ல இருந்ததையும் கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதும், நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் தொடுத்ததும், விபத்து ஏற்பட காரணமான சுற்றுச் சுவர் உரிமையாளர் இதுவரை கைது செய்யப் படாததும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.