`காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்` போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை
Vaiko Warns Modi Govt: ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசி கைவிட வேண்டும் - வைகோ கோரிக்கை.
Coal Blocks In Cauvery Delta: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் ஒன்றிய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்ச்சித்தால், கடும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் காவிரிப் படுகையில் நிலக்கரி ஏலம் குறித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில் கூறியதாவது,
தமிழ்நாட்டில் காவிரிப் படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசின் சுரங்கத்துறை (Ministry of Mines) மார்ச் 29, 2023 அன்று ஏல அறிவிப்பு வெளியிட்டு, ஏலம் கேட்க கடைசி நாள் மே 30, 2023 என்றும், இதில் நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனங்கள் ஏலம் கேட்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா முழுவதும் 101 வட்டாரங்களில் பூமிக்கு அடியிலிருந்து நிலக்கரி அல்லது நிலக்கரி படுகை மீத்தேன் அல்லது நிலத்தடி நிலக்கரியை வாயுவாக மாற்றி எடுக்கும் (Under Ground Coal Gaszification -UCG) திட்டமும் ஒன்றிய அரசின் சுரங்கத் துறைவெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் அடங்கும்.
1.25 இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு அபாயம்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் - வடசேரி, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் - கீழ் மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு சுரங்கத்துறை ஏல அறிவிப்பு செய்திருக்கிறது. இதில் வடசேரி வட்டாரத்தில் 68.30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11 ஊர்களும், சேத்தியாதோப்பு பகுதியில் 84.41 சதுர கி.மீ. பரப்பளவில் புவனகிரி வட்டத்தில் உள்ள 21 ஊர்களும், மைக்கேல்பட்டி பகுதியில் 14.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4 ஊர்களும் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பில் அடங்கியுள்ளன. மேற்கண்ட வட்டாரங்களில் சுமர் 1.25 இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் ஒன்றிய அரசின் சுரங்கத் துறையால் கையகப்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது.
மேலும் படிக்க: டெல்டா மாவட்டங்களை சீரழிக்க முயற்சி! மத்திய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!
ஒன்றிய அரசின் சுரங்கத்துறை சார்பில், எம்.இ.சி.எல். நிறுவனம் (Exploration and Consultancy Ltd - MECL) வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் (Vadaseri Lignite Block) எனப் பெயரிட்டு, அப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளைக் கிணறுகளும், உடையார்பாளையம் வட்டம் - மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில் இத்திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வு நடத்தி இருக்கிறது.
மாநில அரசிடம் அனுமதி வாங்காத மத்திய அரசு:
தமிழ்நாடு அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் எம்.இ.சி.எல். நிறுவனம் மூலம், ஆய்வு மேற்கொண்டு நிலக்கரி இருப்பை மதிப்பீடு செய்து, தற்போது நிலக்கரி எடுக்க ஏல அறிவிப்பும் வெளியிட்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
எம்.இ.சி.எல். நிறுவனம், ஆழ்துளை கிணறுகள் மூலம் நடத்திய ஆய்வுகளில் காவிரி படுகைகளில் வடசேரி பகுதியில் மட்டும் பூமிக்கடியில் சுமார் 463 அடியிலிருந்து 740 அடி வரையிலான ஆழத்தில் சுமார் 755 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி படிமங்கள் இருப்பதாக ஒன்றிய அரசின் சுரங்கத்துறை கண்டறிந்துள்ளது.
பொன் பூமியை நாசமாக்க நினைக்கும் பாஜக அரசு:
காவிரி படுகை மாவட்டங்களில் நெல் விளையும் பொன் பூமியை நாசமாக்கி, நிலக்கரி சுரங்கம் அமைத்து, பாலைவனப் பகுதியாக மாற்ற முனையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது.
போராட்டங்கள் வெடிக்கும்:
காவிரி பாசனப் பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை சொந்த வாழ்விடங்களிலிருந்து துரத்தி அடித்து, ஏதிலிகளாக்கி, தரகு முதலாளிகளுக்கு எங்கள் மண்ணை பட்டா போட்டுக் கொடுக்க முயற்சிக்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும் என எச்சரிக்கை செய்கிறேன்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மோடி அரசு ஏலம் விடுவதும், மாநில அரசுடன் கலந்தாய்வு செய்யாமல் ஏகாதிபத்திய பேரரசு மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க முயற்சிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்:
2011 ஆம் ஆண்டு காவிரிப் படுகை பகுதிகளில் மீத்தேன் திட்டத்திற்காக ஆய்வு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டபோது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் விவசாயிகள் போராடினார்கள்.
காவிரி டெல்டாவைப் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக மாநிலத்தின் திட்டத்தைத் தடுக்கக் கோரியும் 2014 ஆம் ஆண்டு நவம்பரில் இரயில் மறியல் போட்டமும், அதைதத் தொடர்ந்து 2014 ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2015 ஜனவரி மாதம் வரை ஒன்றரை மாதகாலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நான் மக்களிடையே விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய அரசு அலுவலங்கள் முற்றுகைப் போராட்டமும், மனிதச் சங்கிலிப் போராட்டமும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன. மீண்டும் காவிரி படுகை மக்கள் போராட்டக் களத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஏல அறிவிப்பையும் திரும்பப் பெற வேண்டும் என தனது அறிக்கையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சால் எழுந்த சர்ச்சை: அமமுகவினர் ரகளை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ