வழக்கு தொடருவேன்; மேகதாது அணை கட்டுவதை கைவிட வேண்டும்: முதல்வர் நாராயணசாமி
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது, மற்ற மாநிலங்களில் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள். மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் எனக் கூறினார்.
மேலும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் வருகிற 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.
முன்னதாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.