சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வழிதடத்தில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு சென்ற மெட்ரோ ரயிலில் திடீர் பழுது ஏற்பட்டதால் சென்ட்ரல் நிலையத்துடன் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. 


சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.30 மணி அளவில் வண்ணாரப்பேட்டை நோக்கி மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது சென்ட்ரல் நிலையம் வரும் போது ரயிலின் இன்ஜினில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு மாற்று ரயில் உதவியுடன் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.  


இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கோயம்பேடு தலைமை அலுவலகத்திற்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் தொழில்நுட்ப அதிகாரிகள் விரைந்து வந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 


இதில் தொய்வு ஏற்பட்டதால் மாற்று ரயில் உதவியுடன் ரயிலை கோயம்பேட்டில் உள்ள டெப்போவிற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் போக்குவரத்து சேவை நிறுத்திவைக்கப்பட்டது. 


போக்குவரத்து சேவை நிறுத்தம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டு மெட்ரோ சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.