புரட்சித் தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சித் தொண்டர்களுக்கு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வின்றி உழைத்ததன் பலனாகவும், தன் உடல் நலனை விட கட்சியே முக்கியமானது என்றும் பாடுபட்டதால் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.


ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியை அபகரிக்கவும், ஆட்சியைக் கவிழ்க்கவும் சிலர் செய்த சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுக ஆட்சியை நிலைபெறச் செய்திருப்பதாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும் வகையில் பணியாற்றுவோம் என்று அவர்கள் விடுத்துள்ள மடலில் தெரிவித்துள்ளனர்.


இதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு பழனிசாமி இனிப்புகளை வழங்கினார். மேலும் நலிந்த பிரிவினருக்கு நிதியுதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


இதே போன்று எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.