Durai Murugan Statement On Seeman | தந்தை பெரியார் சொல்லாத ஒன்றை, அவர் பேசியதாக கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து திமுக பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மாபெரும் தலைவர் தந்தை பெரியார். தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை சமூகநீதிக்காகச் சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர் அவர். தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை எவருக்கும் அஞ்சாமல் துணிந்து கூறியவர். அவருடைய பகுத்தறிவு - சுயமரியாதைச் சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின. தன்னுடைய கருத்துகளாகவே இருந்தாலும் அதனைக் கேட்பவர்கள் தங்களுடைய சொந்த புத்தியினால் சிந்தித்து, அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவருடைய கொள்கை உறுதியின் விளைவாக, தேர்தல் களத்தையே காணாமல் தன் இலட்சியங்களை அரசாங்கத்தின் சட்டங்களாகத் திட்டங்களாக மாறச் செய்து, தான் வாழும் காலத்திலேயே அவை நிறைவேறிடக் கண்டவர். 


‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என அவரைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். கொள்கையில் எதிர்துருவமாக இருந்த ராஜாஜி, ‘என் அன்பான எதிரி’ என்று பெரியாரைப் பாராட்டினார். அவரோடு முரண்பட்டவர்களும்கூட அவருடைய தூய தொண்டினை, போராட்டக்குணத்தை, ஒளிவுமறைவின்றிக் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையைப் புகழ்ந்திடத் தவறவில்லை. “ஈ.வெ.ரா.பெரியார் இந்த மண்ணின் மணாளர்” என்று புகழ்ந்துரைத்தார் அக்கிரகாரத்து அதிசய மனிதரான வ.ரா.


உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள், தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் தந்தை பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். அவருடைய தொண்டினைப் போற்றுவார்கள். பெரியார் எந்த நேரத்தில், எந்தச் சூழலில், என்ன சொன்னார் என்று பெரியார் சொன்ன பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்துச் செயல்படுவார்கள். 


திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து, பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான்.  தந்தை பெரியாரின் இலட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்தார் பேரறிஞர் அண்ணா. அப்போது இரு இயக்கங்களுக்குமிடையிலான கருத்து  மோதல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான், 1967-இல் பெரியாரின் வாழ்த்துகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்றார் பேரறிஞர் அண்ணா. 


பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சமபங்கு கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைந்தவரும் அவர்தான். அந்தச் சட்டத்தின்படி அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி ஆணை வழங்கி, முள்ளை அகற்றியவர் மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் தளபதி அவர்கள். தந்தை பெரியாரின் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கடைப்பிடிக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு. 


தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன. அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை. பெரியார் என்ன சொன்னார், எப்போது சொன்னார் என்பது பற்றி தெரியாமலும், பெரியார் சொல்லாதவற்றையும்கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும், யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள், தங்கள் சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரியார் என்ற ஆலமரத்தின் மீது உரசிப் பார்க்கின்றன. இதற்கும் தொலைநோக்குச் சிந்தனையாளரான பெரியாரே நமக்கு வழிகாட்டுகிறார். 


“மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்” என்று 1936-ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏட்டில் பெரியார் எழுதியிருக்கிறார். அவர் சொல்லியுள்ளபடி, மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள். பெரியார், தான் வாழும் காலத்திலேயே பல எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொண்டு, இலட்சியப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். தன் மீதான அவதூறுகளை தன் கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, சமுதாயத்திற்கு விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது. 


தந்தை பெரியார் புகழை நாம் என்றென்றும் போற்றுவோம். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்." என கூறியுள்ளார்.


மேலும் படிக்க | 'பீப் பிரியாணியை விற்க கூடாது' பாஜக நிர்வாகி மிரட்டல்... கண்ணீர்விட்ட பெண் - கோவையில் பரபரப்பு


மேலும் படிக்க | பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படுமா? தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ