Beef Issue In Coimbatore Latest News Updates: கோவை கணபதி அருகே உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை நடத்தி வருபவர்கள் ரவி - ஆபிதா தம்பதியினர். இவர்கள் மூன்று சந்திப்பு அருகே மாட்டீறைச்சி உணவு கடையை நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் இருக்கும் நபர் ஒருவர் இங்கே பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகியவற்றை விற்கும் கடைகளை இங்கு நடத்தக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இப்பகுதியில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் மாட்டிறைச்சியை மட்டும் விற்கக் கூடாது என மிரட்டி உள்ளார். இதனை ரவி - ஆபிதா தம்பதியினர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும் இச்சம்பவம் நடந்ததை தொடர்ந்து இவர்கள் சற்று தள்ளி கடையை போட்டுள்ளனர்.
பீப் உணவு விற்பனையாளர்களை மிரட்டிய பாஜக பிரமுகர்
வீடியோ வைரலானதை தொடர்ந்து செய்தியாளர்கள் அச்சம்பவம் குறித்து ரவி - ஆபிதாவிடம் சென்ற போது, ஆபிதா இதுகுறித்து கூறுகையில்,"கிறிஸ்துமஸ் பண்டிகையில் அன்று அவர் முதலில் வந்து மிரட்டினார். இருப்பினும் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அடுத்த சில நாள்கள் கழித்து வந்து, 'கடையை காலி செய்ய சொல்லி அன்றே சொன்னேன் அல்லவா... ஏன் இன்னும் கடைப் போட்டுள்ளீர்கள்?' என மீண்டும் மிரட்டினார். அதுமட்டுமின்றி, 10 பேரை அழைத்து வந்து கடையை அடித்து உடைத்துவிடுவதாக கூறி எங்களை மிரட்டினார். அதனால் அன்று எங்கள் கடையில் வந்து உணவருந்த அச்சப்பட்டு யாருமே கடைக்கு வரவில்லை. எனக்கு இதனால் ரூ.6 ஆயிரம் அளவில் அன்று மட்டும் நஷ்டமாகிவிட்டது.
பீப் என்றால் கேவலமா...?
அவர்களுக்கு ஆகாது என்பதால் பீப் கடையை போடக்கூடாது என்கின்றனர். இட்லி, தோசை கடை போட வேண்டியதுதானே என கூறுகிறார். எங்களுக்கு தெரிந்த தொழிலை தானே எங்களால் செய்ய முடியும். அவர்களுக்கு தெரிந்த தொழிலையா செய்ய முடியும். இங்கு சிக்கன் ரைஸ் கடை, மீன் கடைகள் எல்லாம் இருக்கிறது. அவர்களை எடுக்கச் சொன்னால் நானும் எடுக்கிறேன். பீப் என்பதால் கேவலமாக பார்க்கிறார். பீப் ஆரோக்கியமான ஒன்று, உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
அப்படியிருக்க பீப்பை ஏன் கேவலமாக பார்க்க வேண்டும். நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. இதை பீப் என சொல்லிதான் விற்கிறோம். வாடிக்கையாளர்களும் விருப்பப்பட்டு தெரிந்துதான் உண்கிறார்கள். எங்களுக்கு தெரிந்தது இந்த தொழில்தான், எங்களை நிம்மதியாக தொழில் செய்யவிட்டால் போதும்" என கண்ணீர் மல்க கூறினார். அவரது கணவர் ரவி இதுகுறித்து கூறுகையில், மதம், சாதி பேதம் பார்த்து அவர்கள் எங்களை மிரட்டுகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.
போலீசாரிடம் கோரிக்கை
தங்களை மிரட்டிய நபரின் பெயர் சுப்ரமணி என்றும் அவர் பாஜகவில் இருப்பவர் என்றும் கூறுகின்றனர். இங்கு இறைச்சி கடைகள் போடலாம் என்றும் ஆனால் மாட்டிறைச்சி உணவுகள் மட்டும் விற்கக் கூடாது என்று அவர் மிரட்டியதாகவும் கூறினர். மேலும், இதனால் தாங்கள் அந்த பகுதியில் இருந்து சற்று தள்ளி இந்த கடையை போட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் தற்போது வந்து தங்களிடம் பேசியதாகவும் கூறுகின்றனர். தங்களை பொறுத்தவரை அந்த பகுதியில் கடை போடுவதற்கு அனுமதி அளித்து பாதுகாப்பு அளித்தால் மட்டும்போதும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினர்.
அதே போல அந்த வீடியோவில் தள்ளுவண்டி கடைக்காரரை மிரட்டிய பாஜகவின் ஓபிசி அணியின் மாநகர மாவட்ட செயலாளர் சுப்ரமணி பேசுகையில், "ஊர்கட்டுபாடு என்பதால் பீப் கடை போடக் கூடாது என்று சொன்னேன்" என தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பலரும் அந்த பாஜக பிரமுகருக்கு கண்டனம் செலுத்தி வருகின்றனர். அன்றாட வாழ்வுக்காக உழைக்கும் மக்களை மிரட்டுவது என்பது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ