முதல்வர், துணை முதல்வரை தவறாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!!
முதல்வர்மற்றும் துணை முதல்வரை டுவிட்டரில் தவறாக விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 21- ம் தேதி நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவின் கட்சி பதவியிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிரடியாக நீக்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி;-ஆறு மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு 9 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள் என்று பதிவிட்டு அந்தப் பதிவில் முதல்வரையும் துணை முதல்வரையும் தவறான வார்த்தையால் பேசி விமர்சித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து கூறியதாவது;- ஆடிட்டர் குருமூர்த்தி கீழ்தரமான வார்த்தைகளை பேசுவதற்கு அவர் என்ன கிங் மேக்கரா? எதற்கும் ஒரு எல்லை உண்டு.
அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர். எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும். தடித்த வார்த்தை கூற கூடாது, அப்படி இல்லையென்றால் நாங்கள் நூறு வார்த்தை சொல்வோம். அவசியம் ஏற்பட்டால் அவர் மீது வழக்கு தொடரவும் தயாராக உள்ளோம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.