அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக உறுமாற்ற அதனை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களைச் சேர்த்து தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவும், மற்ற பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிடவும் தமிழக அரசு பரிசீலித்துவருகிறது. அதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட 5 நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களைச் சேர்த்து தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவும், மற்ற பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிடவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.


இது தொடர்பாக தமிழக அரசு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவினை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. எனினும், அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைத் தன் வசமாக்கிக் கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


ஏற்கனவே உள்ள பல்கலைக்கழகச் சட்டத்தின்கீழ் அண்ணா பல்கலைகழகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த போதிலும், பல்கலைக்கழகத்தின் முழு அதிகாரத்தையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மொத்தமாக கைப்பற்றிக் கொள்வதற்கு, பின் வழியாக பயன்படுத்தப்படும் அஸ்திரம் தான் இந்தச் சிறப்பு அந்தஸ்து எனவும், மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு விதிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்று எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது