சுர்ஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது: விஜயபாஸ்கர்
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 43 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது..!
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 43 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 43 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது, என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்; ‘வேகமாகவும், கவனமாகவும், பாதுகாப்பாகவும் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் களத்தில் உள்ளனர். நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். ரிக் மூலம் 6.3 மீட்டர் வரை தோண்டப்பட்டு தொடர்ந்து தோண்டும் பணி நடைபெறுகிறது. சக்தி வாய்ந்த இன்னொரு ரிக் வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது. 27 மீட்டரில் குழந்தையின் கைகல் ஏர் லாக் மூலம் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு கடினமான பாறைகள் இருப்பதால் தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
மேலும், நேற்று முதல் குழந்தை சுர்ஜித் கைகள் அசையவில்லை; குழந்தையின் அழுகுரலும் கேட்கவில்லை என்றும், வெப்பம் இருப்பதால் குழந்தை மயக்க நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.