கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.... அழகிரி பேட்டி... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஒரு மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக மு.க.அழகிரி அறிவித்திருந்தார். இதற்காக மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனது தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றுடன் 7-வது நாளாக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். 
 
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி, "தாக்கத்திற்காக அல்ல. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்டம்பர் 5 ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது பற்றி நான் கருத்து கூற ஒன்றுமில்லை எனவும் கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்" எனவும் தெரிவித்துள்ளார். 


இதை தொடர்ந்து, கட்சியில் சேர்ந்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அழகிரி கட்சியில சேரணும்னு விருப்பப்பட்டா அப்புறம் தலைவரா ஏத்துக்கதானே வேணும் என்று தெரிவித்துள்ளார். 



முன்னதாக, கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற மு.க.அழகிரி, 'கலைஞரிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். உண்மையான கட்சித் தொண்டர்கள் எனது பக்கமே உள்ளனர். விரைவில் என் மனதில் இருக்கும் ஆதங்கத்தை மக்களிடம் வெளிப்படுத்துவேன். செப்டம்பர் 5 ஆம் தேதி நடக்கும் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துகொள்வார்கள்" என தெரிவித்திருந்தார்.