ஜனநாயகப் படுகொலை செய்யவேண்டாம்.. தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை வழங்கிய ஸ்டாலின்
மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக தேர்தல் ஆணையம் இனியும் செயல்படாமல் அரசியல் சட்ட கடமையை அச்சமின்றி நிறைவேற்றிட முன்வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக தேர்தல் ஆணையம் இனியும் செயல்படாமல் அரசியல் சட்ட கடமையை அச்சமின்றி நிறைவேற்றிட முன்வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசிடமே முழுமையாக ஒப்படைத்து விட்டு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொண்டு விட்டதோ என்ற பலத்த சந்தேகம் தேர்தலை சந்திக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
பல மாதங்கள் காலியாக இருக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ள தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்காதது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அமைந்து விட்டது. பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும் நீதிமன்ற தடையுத்தரவு ஏதுமில்லாத நிலையிலும், இடைத் தேர்தலை தள்ளி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இடைத் தேர்தலை நடத்துவதற்குக்கூட சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை இப்போதுள்ள தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் “குட்கா ஊழல்” வழக்கில் சி.பி.ஐ ரெய்டு செய்த டி.ஜி.பி.யை வைத்தே தேர்தலை நடத்த அதிமுக அரசுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து இங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் கைகட்டி நிற்கிறார். தேர்தல் ஆணையமும் எவ்வித சலனமும் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. திராவிடமுன்னேற்றக் கழகம் சார்பில் டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரன், மாநில உளவுத்துறை ஐ.ஜி திரு சத்தியமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி மனுக்கொடுத்தும் வேட்பு மனு தாக்கல் முடியும் நேரம் வரை கூட எந்த போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்படவில்லை. வழக்கமாக மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் அதே பதவியில் தொடருகிறார்கள்.
எதிர்கட்சிகள் மீது மட்டுமே தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆளுங்கட்சியினரின் அத்தனை விதிமுறை மீறல்களையும் தலைமை தேர்தல் அதிகாரி தாராளமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறார். “திருப்பரங்குன்றம் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையை போலியாக வைக்கப்பட்டது” என்றும், “அதை ஏற்று அதிமுகவின் ஊது குழலாக தலைமை தேர்தல் அதிகாரி செயல்பட்டார்” என்றும் உயர்நீதிமன்றமே கண்டனம் செய்த பிறகும் அந்த தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், வழக்குப் போடுவதற்கும் இன்றுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
சின்னங்கள் ஒதுக்குவதில் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்திய தேர்தல் ஆணையம் வரலாறு காணாத வகையில் பாரபட்சமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் செயல்படுகிறது. எதிர்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன. ஆனால் பா.ஜ.க- அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னமே பழைய சின்னமே ஒதுக்கப்படுகிறது. பா.ஜ.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சி போல் தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது.
ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூச முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. “அதிமுக விரும்பும் அதிகாரிகளை வைத்து தேர்தலை நடத்திக் கொள்ளட்டும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துக் கொள்ளட்டும். அவர்கள் எத்தனை விதிமுறைகளை வேண்டுமானாலும் மீறிக் கொள்ளட்டும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு போட்டுள்ள கட்டளைக்கு இந்திய தேர்தல் ஆணையமும், இங்குள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியும் அடிபணிந்துகிடப்பது மன்னிக்க முடியாத மாபெரும் ஜனநாயகப் படுகொலை.
பா.ஜ.க. ஆட்சியில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது போல் இன்று பா.ஜ.க. ஆட்சியை விட்டுச் செல்லும் நிலையில் கடைசியாக தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி சுதந்திரதையும் சூறையாடியிருப்பது ஜனநாயகத்தின் இதயத்தில் ஈட்டி கொண்டு கொடூரமாகப் பாய்ச்சும் செயலாக அமைந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வரைபடத்தில் அதிமுக அரசும், தேர்தல் அதிகாரிகளும் தனித்தீவு போல் செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பு மத்திய பா.ஜ.க. அரசால் திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு உருவாக்கப்படுவதை ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆகவே தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டப் பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில் அத்தனை போலீஸ் அதிகாரிகளையும், மூன்று வருடங்களுக்கு மேல் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளையும் தாமதமின்றி மாற்றி நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக தேர்தல் ஆணையம் இனியும் செயல்படாமல் அரசியல் சட்ட கடமையை அச்சமின்றி நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.