அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்காதீர்: ஸ்டாலின்!
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி அவர்களை கடுமையான இன்னலுக்கு ஆளாக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசாணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்பபெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி", "15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை" ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி குறைப்பு என்று ADMK அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.
அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து, நமது மக்களைக் காப்பாற்றிட, போர்க்கால உணர்வுடன் பணியாற்றி வரும் நிலையில் ADMK அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை - அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அரசு ஏனோ உணரவில்லை.
காவல்துறையினர், மருத்துவத்துறையினர், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் என பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக் கணக்கான ஊழியர்கள், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்காக பணியாற்றி - கொரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு முடிவு எடுத்தவுடன் - உடனே அதைப் பின்பற்றி, ADMK அரசும் ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகளை ரத்து செய்வதை, மக்கள் நலனில் அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. "நிதி மேலாண்மையில் நாங்கள் புலிகள்" என்று "விளம்பரம்" செய்து வந்த ADMK அரசும், ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்திருப்பது - ADMK ஆட்சியின் நிதி மேலாண்மை படுகுழியில் தள்ளப்பட்டு விட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேர வேண்டிய GST பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கொரோனா பேரிடர் நிவாரணத்திற்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக் கேட்டு, உடனடியாக பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது!" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.