India vs Bharat: ஜி-20 தலைவர்களின் உச்சி மாநாடு வரும் செப். 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லயில் உள்ள பிரகதி மைதானத்தின் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி வளாகத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தியா தற்போது ஜி20 அமைப்பின் தலைவர் பதவியை வகிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 


சீன தரப்பில் அதன் அதிபர் ஜி ஜன்பிங் கலந்துகொள்ளவில்லை என்றும் அவருக்கு பதிலாக சீனப் பிரதிநிதிகள் குழுவை சீன பிரதமர் லீ கியாங் வழிநடத்துவார் என்று சீனாவின் வெளியுறவு துறை அறிவித்துள்ளது. மேலும், உக்ரைன் - ரஷ்யா போரினால் ரஷ்ய அதிபர் புதினும் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிகிறது. 


அந்த வகையில், டெல்லியில் ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி-20 மாநாட்டையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும், அவர்களின் பிரதிநிதிகள் குழுவும் டெல்லிக்கு வருகை தர உள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | G-20 அழைப்பில் பாரத குடியரசுத்தலைவர்... எதிர்கட்சியினர் கண்டனம்!


இதில், வரும் செப். 9ஆம் தேதி இரவு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான இரவு விருந்திருக்கான அழைப்பிதழ் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 'President Of India' என்பதற்கு பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை 'President Of Bharat' என குறிப்பிட்டு நாட்டின் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என மாற்றியுள்ளனர். இது எதிர்கட்சிகளை மட்டுமின்றி பல்வேறு ஜனநாயக அமைப்புகளிலும் பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இருப்பினும், நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சேவாக் ஆகியோரிடம் இருந்து நாட்டின் பெயரை மாற்றுவதற்கு ஆதரவும் கிளம்பி உள்ளது.  


இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் (தற்போது X) பக்கத்தில்,"பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு 'INDIA' என்று பெயர் சூட்டியதில் இருந்து பாஜகவுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.



இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்" என குறிப்பிட்டுள்ளார். 


சமீப காலமாக, 'ஒரு நாடு ஒரு தேர்தல்', 'சனாதன தர்மம்' என தேசிய அளவில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வந்தன. தற்போது அவற்றை விட அரசியல் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் இந்தியா - பாரத் ஆகியவை டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஜில் பிடனுக்கு கொரோனா... ஜோ பிடனின் இந்திய பயணம் பாதிக்கப்படுமா..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ