அனிதா குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
'நீட்' தேர்வினால் உயிர் இழந்த இளம்பெண் அனிதாவின் குடும்பத்துக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனித்தா தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கு பிறகு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தால், மாணவி அனிதா உயிருடன் இருந்திருப்பார் என்றும், நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு தவறான தகவல் அளித்துள்ளதாக குற்றம் கூறினார். மேலும், அனிதாவின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.