இந்தியாவெங்கும் சமூக நீதி... முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த முக்கிய மாநாடு!
All India Federation For Social Justice Conference: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூக நீதியை தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலைநாட்டுவதில் சிரத்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் உள்ள சமூக நீதி குரல்களை ஒருங்கிணைக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பில் தேசிய அளவில் மிகுந்த கவனத்தை பெற்ற அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பின் முதல் மாநாடு குறித்து இதில் காணலாம்.
All India Federation For Social Justice Conference: சமூக நீதி என்ற சொல்லை, தமிழ்நாடு அரசியலில் இருந்தும், அந்த பண்பாட்டு போக்கில் இருந்தும் அகற்றவே முடியாது என்றளவுக்கு அது வேரூன்றியிருக்கிறது. சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமான அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற உரிமைக்குரலாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதமாகவும் சமூக நீதி விளங்குகிறது.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசும், சமூக நீதியை தமிழநாட்டில் தொடர்ந்து நிலைநாட்டுவதில் சிரத்தையாக இருந்து வருகிறது என கூறலாம். குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதி கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்தது. வேலைவாய்ப்பு, பணியாளர்களின் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை இந்த குழு கண்காணிக்கும் என தெரிவித்திருந்தது.
இட ஒதுக்கீட்டின் அவசியம்:
இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையான இட ஒதுக்கீடு என்பது மக்களுக்கு நீண்ட நாளாக முறையாக போய் சேரவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வரும் வேளையில், அதனை கண்காணிப்பதின் அவசியத்தை திமுக அரசு உணர்ந்திருக்கிறது என்பதை இந்த குழுவின் மூலமாக நாம் தெரிந்துகொள்ளலாம்.
இருப்பினும், இட ஒதுக்கீடு பிரச்னையோ அல்லது சமூக நீதி மீதான பிரச்னையோ தமிழ்நாட்டுக்கு மட்டுமேயானது இல்லை, அது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமான பிரச்னையாகும். கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு சார்ந்த பிரச்னைகள் இந்தியா முழுவதும் வியாபித்து இருக்கின்றன. எனவே, சமூக நீதியை வலியுறுத்தும் சக்திகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிவித்த முக ஸ்டாலின்!
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு:
அதன் பொருட்டு, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உரிமையை நிலைநாட்ட, "அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு" தொடங்கப்படும் என கடந்தாண்டு ஜன. 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதன்மூலம், அகில இந்திய அளிவில் சமூக நீதியை வலியுறுத்தும் கட்சிகள், குடிமைச் சமூகத்தினர், ஒத்தச்சிந்தனையுடைய தனிநபர்கள் உள்ளிட்டோருக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பும் விடுத்திருந்தார்.
தேசிய அளவில் பல்வேறு எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டாலும் இதில், சமூக நீதி என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தியிருந்தார் எனலாம். இதனையடுத்து, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் மாநாடு, கடந்த ஏப்.4 ஆம் தேதி காணொளி காட்சி மூலமும், நேரிலும் நடைபெற்றது. டெல்லி கஸ்தூரிபாய் காந்தி சாலையில் உள்ள அரங்கம் ஒன்றில் பல்வேறு தலைவர் நேரில் வந்தும், இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் ஆன்லைன் மூலம் அந்த மாநாட்டில் உரையாற்றினர்.
மேலும் படிக்க: ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை திட்டம்..அரசு அதிரடி அறிவிப்பு
முதல் மாநாடு:
தனியார் துறையில் இட ஒதுக்கீடு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தற்போது, கொண்டுவரப்பட்டுள்ள EWS 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன உரிமைக்கு எதிரானது என்பதை இதில் பல்வேறு தலைவர்கள் பதிவு செய்தனர்.
அரசியல் சாசனத்தின் 340 பிரிவில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கூறியிருந்த நிலையில், தற்போது பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பது வஞ்சகமானது என முதலமைச்சர் ஸ்டாலின் அதில் பேசியிருந்தார். தற்போது மாறிவரும் பொருளாதாரச் சூழலில், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதும் பெரும் கோரிக்கையாக எழுந்துள்ளது.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு:
அனைத்தும் தனியார்மயமாகிவிட்ட சூழலில், தற்போதுள்ள இட ஒதுக்கீடை மட்டும் வைத்துக்கொள்வது சரியாக இருக்காது என்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கொண்டுவருவது தான் அதனை சமூக நீதிக்கான பலனை முழுமை பெற செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் இருந்தும் இத்தகைய கோரிக்கைகள் எழுந்திருந்தாலும், அவை தற்போது வரை கோரிக்கையாகவே இருந்து வருகிறது. இதுசார்ந்த குரல்கள் ஒன்றிணைவதன் மூலம், அதனை பொது நீரோட்டத்தின் உரையாடலுக்குள் கொண்டுவர திமுக நினைக்கிறது. தொடர்ந்து, 'திராவிட மாடல்' அரசு என்ற அனைவருக்கமான அரசு என தன்னை முன்னிறுத்தி வரும் திமுகவுக்கு சமூக நீதி குறித்தான இந்த உரையாடலும் முக்கியமானதாக தெரிகிறது.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் பெண் போராளிகள் வெளியில் தெரிகின்றனர் - திருச்சி சிவா!
மு.க. ஸ்டாலினின் முக்கிய கோரிக்கைகள்:
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுத்துவது; நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவது; இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது; ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தவது உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அந்த மாநாட்டில் முன்னிறுத்திருயிருந்தார். மேலும், இவற்றை அகில இந்திய ரீதியில், மாநில ரீதியில், சமூக ரீதியில் கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
ஜாதிய ரீதியிலான ஒடுக்குமுறை எதிர்ப்பு, இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு கிடைக்குக்கூடிய உரிமைகள், சங்பரிவார்களுக்கு எதிரான கருத்துப்போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகளும் இந்த சமூக நீதிக்கான அரசியல் கட்சிகளின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நூற்றாண்டு கடந்த சமூக நீதி:
இந்த மாநாடு, தமிழ்நாடு அரசு முன்வைக்கும் 'திராவிட மாடல்' கோட்பாட்டை பரந்துப்பட்ட அளவில் கொண்டுசெல்ல உதவும் எனவும் தெரிகிறது. சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை போக்கும் என்பது திமுகவின் அசைக்க முடியாத கொள்கைகளில் ஒன்று எனலாம்.
நூற்றாண்டு கடந்த சமூக நீதி கோட்பாட்டை, இந்திய துணைக்கண்டம் முழுவதும் கொண்டுசெல்ல இந்த அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு வழிவகுக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க: 80% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ