தமிழக சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த  வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின்  மனு ஒன்றை அளித்தார். அவருடன் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.


அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதும், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகவும் அமைந்துவிட்டது.ஆகவே, அரசியல் சட்டம், பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் தமிழக அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு ஆகிய உயர்ந்த தத்துவங்களை, கொள்கைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 18-2-2017 அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சட்டத்திற்கு எதிரான நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு முறையில், தமிழக சட்டமன்றத்தில் புதிய நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பொறுப்பு கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.


சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திடம் அரசியல் ஆலோசனை குறித்து  விவாதிக்கப்பட்டது எனத்தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, திமுக மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் உடன் இருந்தனர்.