விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடனில் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் திமுக 20 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகின்றது. அதற்க்கான தேர்தல் அறிக்கையை திமுக சார்பில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி. கிராமப்புற பெண்களுக்கு தொழில் தொடங்க ரூ. 50,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடனை முழுமையான தள்ளுபடி செய்யப்படும் போன்ற முக்கிய அறிவிப்புக்களை அறிவித்தது.
இந்நிலையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடனில் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.