இலவச திட்டங்கள் அல்ல; சமூக நல திட்டங்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இலவச திட்டங்கள் அல்ல. சமூக நல திட்டங்கள். ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறதென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பல இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு கபாலீஸ்வரர் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி சுழன்று பணியாற்றி வந்தாலும் எனது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வருகிறபோது நான் அடையக் கூடிய மகிழ்ச்சி என்பது ஒரு அலாதியானது. "வயிற்றுக்கு சோறிட வேண்டும். இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம், பயிற்று பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்த வேண்டும்" என்று பாடினார் பாரதியார். அந்த வகையில் ஒரு கல்லூரி எனது தொகுதியில் அமைந்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை, கூடுதல் மகிழ்ச்சி.
இந்து சமய அற நிலையத்துறையின் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு மூலமாக வெளியிடப்பட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கோரிக்கை வைக்காமலேயே அமைச்சர் அதை நிறைவேற்றி தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றியை இந்த தொகுதி மக்களின் சார்பில் தெரிவிக்கிறேன். பொதுவாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முதலமைச்சராக இருக்கக் கூடிய நான் யாரி டம் கோரிக்கை வைப்பது? அதனால்தான் 10-ல் ஒரு கல்லூரியை நான் கோரிக்கை வைக்காமலேயே அமைச்சர் நமது தொகுதிக்கு நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். தற்போது மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறைவு பெற்று பல்கலைக்கழக தேர்வுகள் முடிவுற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள்.
கல்வியானது அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்து அனைவரும் முன்னேற வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு மாணவ சமுதாயத்தின் மீது இருக்கக் கூடிய உண்மையான அக்கறையின் காரணமாக இந்த அரசு செய்யக் கூடிய கடைமயாக இதனை நாங்கள் கருதுகிறோம். இலவசம் வேறு, நலத் திட்டங்கள் வேறு என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்ததை நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். இது தொடர்பாக நாட்டில் இப்போது பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது. உடல் நலம் சார்ந்தது. அறிவு நலம் சார்ந்தது கல்வி, உடல்நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவுக்கு மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. இலவசம் என்று சொல்கிற போது நீங்கள் இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | RSS அமைப்பின் சமூக ஊடக பக்கங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது
இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு, நான் முதல்வன், பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி, மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்துமே மக்கள் நல திட்டங்களாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இவையெல்லாம் இலவச திட்டங்கள் அல்ல. சமூக நல திட்டங்கள். ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறது. இலவசங்கள் கூடாது என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு இப்போது புதிதாக வந்திருக்கிறார்கள். அதுபற்றி நமக்கு கவலை இல்லை. இதற்கு மேல் பேசினால் இது அரசியலாகிவிடும். எனவே இதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ