உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்!: கொரோனா தொற்றுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் என்று வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: கொரோனா தொற்றின் தீவிரமும் பரவும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகின்றது.
தமிழத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு உயர்ந்துகொண்டே உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு தங்களாலான உதவிகளை செய்யுமாறு தமிழக முதல்வர் ஏற்கனவே பொது மக்களிடம் கேட்டிருந்தார். தற்போது அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் என்று வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர், "உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள்" என்று கோரியுள்ளார்.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
- கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. தமிழகம் மிகப்பெரிய மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
- தொற்றுக்கு ஆளானவர்களை காக்கும் பணியில் தமிழக அரசு கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு வருகிறது.
- கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மகக்ளுக்கு அரசு நிவாரண நிதியை வழங்கி வருகிறது.
- திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்கள்.
- புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.
- கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அளிக்கப்படும் நிதிக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படும்.
- நீங்கள் அளிக்கும் நிதி கொரோனாவை ஒழிக்க உதவும். மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்.
- சிக்கலான இந்த நேரத்தில் தமிழகத்துக்கு பல்வேறு வகையில் உதவி வரும் அனைவருக்கும் நன்றி.
தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை இங்கே காணலாம்:
முன்னதாக, நேற்று தமிழகத்தில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 30,000-ஐத் தாண்டியது. நேற்று தமிழகத்தில் 30,355 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். 293 பேர் இறந்த நிலையில், 19,508 பேர் குணமடைந்தனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR