எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருக்குறள்களில் மிக முக்கியமான குறள் இது. இதன் பொருள் அனைவருக்குமே தெரியும். ஆனால் அந்தப் பொருள்படிதான் இங்கு பலர் நடந்துகொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம். அதிலும் இளையராஜா விஷயத்தில் யாரும் அப்படி நடந்துகொள்ளவில்லைல் என்பது மட்டும் உண்மை.


அப்படி என்ன செய்துவிட்டார் இளையராஜா. மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு ஒரு முன்னுரை எழுதினார். உடனடியாக சமூக வலைதளவாசிகள் பலர் இளையராஜாவை ஞானி என்ற இடத்திலிருந்து சங்கி, அடிப்படைவாதி என்ற இடத்திற்கு நகர்த்தியிருக்கின்றனர். 



அவர் உண்மையில் அடிப்படைவாதியாக இருந்திருந்தால் தனது மகன் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதம் மாறியதற்கு எதிராக போர்க்கொடிதான் தூக்கியிருப்பார். ஆனால் அவரோ இஸ்லாமிய முறைப்படி வளரும் தனது பேத்தியை தூக்கி கொஞ்சிக்கொண்டிருக்கிறார் என்பதை கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | மோடி - அம்பேத்கர் ஒப்பீடு... தேசிய அளவில் இளையராஜாவுக்கு வலுக்கும் ஆதரவு


ராஜா கூறிய ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் அவருக்கு எதிராக எவ்வளவு பேச முடியுமோ அவ்வளையும் தாண்டி பேசிக்கொண்டிருக்கின்றனர்.



அரசியல் ரீதியாக அவர் வைத்த கருத்து என்பது அவரது உரிமை. இங்கு எப்படி பெரியாரை, அண்ணாவை, காமராஜரை, கருணாநிதியை புகழ ஒருவருக்கு உரிமை இருக்கிறதோ அதேபோல் மோடியையும் புகழ ஒருவருக்கு உரிமை உண்டு. அது அவரது தனிப்பட்ட பார்வை. அதற்காக கடந்த வாரம்வரை கொண்டாடப்பட்ட இளையராஜாவை இந்த வாரம் வரம்பு மீறி விமர்சிப்பது எந்தவிதத்திலும் அறம் ஆகாது.


முக்கியமாக இளையராஜா பதவிக்கு ஆசைப்பட்டுதான் மோடியை புகழ்ந்திருக்கிறார் என்று கூறுவதெல்லாம் அறிவிலித்தனம் தவிர வேறு ஒன்றும் இல்லை. கிட்டத்தட்ட 47 வருடங்களாக அவர் தமிழ்நாட்டின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் இதுவரை அவர் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதாக ஒரு தகவல்கூட கிடையாது.


மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு


இங்கு மோடியை புகழ்வது பிரச்னையா இல்லை அதை இளையராஜா செய்தது பிரச்னையா என்ற கேள்வியும் எழுகிறது. மோடியையோ, பாஜகவையோ புகழாதவர்கள் இங்கு சொற்பமே. அரசியல் சதுரங்கத்தில் இது பலமுறை மாறி மாறி நடந்திருக்கிறது. 



முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியேகூட மோடியை புகழ்ந்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணியும் வைத்திருக்கிறார். கமல் ஹாசன் எத்தனையோ முறை நடுநிலை என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத பல கருத்துக்களை கூறியிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் ஏன் இவ்வளவு பூதாகரமாக மாறவில்லை.


இளையராஜா ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர். அவர் மோடியை புகழவேக்கூடாது என்பதெல்லாம் எந்தவிதத்தில் ஞாயம். சமூக வலைதளங்களில் அமர்ந்துகொண்டு புரட்சி செய்தவர் இல்லை இளையராஜா. அவர் இசையமைக்க வந்ததே ஒரு புரட்சிதான்.


 


சில வருடங்களுக்கு முன்பு ரத்னகுமார் என்ற கதாசிரியர் அளித்த ஒரு பேட்டியில் இளையராஜாவை எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசினார். ஆதிக்க வெறி ஊறிப்போன, ஒடுக்கப்பட்ட ஒருவரின் வெற்றியை ஜீரணித்துக்கொள்ளவே முடியாத ஒருவரால்தான் அப்படி பேச முடியும். இப்போது இளையராஜாவுக்கு எதிராக நிற்பவர்களில் சொற்ப பேர்தான் இளையராஜாவுக்காக நின்று பேசினார்கள். அப்போது மட்டும் ஏன் அந்த மௌனம்.


தனக்கு ஒவ்வாத கருத்தை ஒருவர் கூறினால்,தனக்கு விருப்பமில்லாதவரை இன்னொருவர் விரும்பினால் அவர் மீது தாக்குதல் நடத்துவதெல்லாம்தான் பாசிசம். அப்படி பார்க்கையில் இளையராஜா மீது தாக்குதல் நடத்துவதும் பாசிசமே.



இளையராஜா மீது தாக்குதல் நடத்துபவர்களில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் சிலரின் தாக்குதல் வரம்பு மீறி சென்றுவிட்டது. திராவிடமும், பெரியாரும் இல்லையென்றால் இளையராஜா இசையமைக்கவே வந்திருக்க முடியாது. சாவு வீட்டில் மோளம் அடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகள் உலாவுகின்றன. இப்படி பேசுவதற்கு எவ்வளவு பெரிய வன்மம் இருந்திருக்க வேண்டும்.


கருணாநிதி பிறந்தநாளில் தனது பிறந்தநாளும் வருவதால் ஒரு நாள் தாமதமாக தனது பிறந்தநாளை கொண்டாடுபவர் இளையராஜா. இளையராஜாவுக்கு இசைஞானி என்று பட்டம் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. இப்போது பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ இருந்திருந்தால் திராவிட சித்தாந்தவாதிகள் இளையராஜா மீது கக்கும் வன்மத்தை கண்டு ரசிக்கவா செய்திருப்பார்கள்.



ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் சுமூக உறவு இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் பேசினாரே. பாஜக நியமித்த ஆளுநருக்கும், தற்போதைய திராவிட மாடல் தலைவனுக்கும் சுமூக உறவு எப்படி இருக்கிறது என கேள்வி கேட்டால் இளையராஜாவை வரம்பு மீறி தாக்கும் திராவிட சித்தாந்தவாதிகள் ஏற்றுக்கொள்வார்களா?


ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை கேட்க வைத்த தமிழன் இளையராஜா என்று அவரை கடந்த வாரம்வரை புகழ்ந்தவர்கள் எல்லாம் இப்போது சலீல் சௌத்ரியை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சலீல் சௌத்ரியை கொண்டாடுவது தவறில்லை ஆனால் அந்தக் கொண்டாட்டம் இப்போது மட்டும் அதீதமாக இருக்கிறதே ஏன்? இளையராஜா மோடியை புகழ்ந்துவிட்டார் என்பதாலா?



இளையராஜா இசைஞானி என்பதால் அவரை விமர்சிக்கவே கூடாதா என்றால்; விமர்சிக்கலாம்தான். கடவுளே இங்கு விமர்சனத்துக்கு உட்பட்டவர்தான் சாதாரண ஞானி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா என்ன? ஆனால் அந்த விமர்சனம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.


மோடியை புகழ்ந்தது இளையராஜாவின் தனிப்பட்ட விருப்பம். அவரவர் பார்வையில் அவரவர் உலகம் என்ற கூற்று இருக்கையில் நம் பார்வையில்தான் இளையராஜா இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்று கூறுவதுதான் அடிப்படைவாதத்தனம். அப்படி பார்க்கையில் சமூக வலைதளங்களில் பலர் அடிப்படைவாதிகளாகவே இருக்கின்றனர்.



பாஜகவுக்கு இளையராஜா பரப்புரை செய்யவில்லை. மோடிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவில்லை. தாமரை மேலே இருக்கும் நீர்த்துளி போல பேசியிருக்கிறார். ஆனால் தாமரைக்குள் இருந்துகொண்டு இளையராஜா பேசுவதுபோல் மற்றவர்கள்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். நம்மைவிட இளையராஜாவைப் பற்றி இளையராஜாவுக்குத்தான் அதிகம் தெரியும்.


இளையராஜா தமிழ் சமூகத்திற்கு இசையால் செய்த தொண்டுக்கு நன்றிக்கடனாய் இச்சமூகம் இன்றுவரை எதுவுமே செய்யவில்லை. அதனால் இளையராஜாவின் கருத்துக்கு வழிவிட்டு அவரது இசையை வழக்கம்போல் ரசித்தலே; அவரது இசையை கொண்டாடுவதே சிறந்தது ஆகும். ஏனென்றால், 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR