வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் டெண்டர்   விடப்பட்ட காலத்திலேயே முடித்திருக்க வேண்டும். தற்போது 70 சதவீதப் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இப்பணிகளை எடுத்த தனியார் ஒப்பந்ததாரர்கள் தாங்களே முன் நின்று வேலை செய்யாமல் துணை ஒப்பந்தக்காரர்கள் நியமித்ததால் இப்பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. துணை ஒப்பந்தக்காரர்கள் முறையாக வேலை செய்யாமல் காலம் தாழ்த்தி உள்ளனர்.


ஒப்பந்தக்காரர்கள் துணை ஒப்பந்தக்காரர்கள் நியமிக்க மாட்டோம் என தெரிவித்து விட்டு, ஒப்பந்தத்தை மீறி துணை ஒப்பந்தக்காரர்கள் நியமித்துள்ளனர். இதனை கடந்த ஆட்சியாளர்கள் அவர்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. வேலூர் மாநகரில் பாதாள சாக்கடை முறையாக செய்யவில்லை. மேலும் வீதிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. எனவே, ஒப்பந்ததாரர்கள் உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார். வரும் 12ஆம் தேதி மாநகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று சாலைகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் அதற்குள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


முல்லைப் பெரியாறு அணை நான்காவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை நிரப்ப முடியாது என கேரள அரசு தெரிவித்திருந்த நிலையில், நான்காவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.