மதுபானம் விற்று தந்தை என்னை படிக்க வைத்தார் - டிஜிபி சைலேந்திரபாபு உருக்கம்!
தனது தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் மதுபானங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன்னை படிக்க வைத்ததாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கு பல்பொருள் அங்காடியின் விரிவாக்கப்பட்ட புதிய சுயசேவை பிரிவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு மற்றும் பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் காவலர்கள் மத்தியில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ''கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆயுதப் படையில் முக்கிய பொறுப்பில் இருந்தேன். இங்கே இருக்கும் கஷ்டம் அப்போது எனக்கு தெரியும்.
நான் இங்கு இருந்தபோது இதுபோன்ற கேன்டீன் எல்லாம் இல்லை, ராணுவத்தில் மட்டுமே இதுபோன்ற கேண்டீன்கள் இருந்து வருகின்றன. என் தந்தை ராணுவத்தில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு ராணுவ கேண்டீனுக்கு சென்று பொருட்கள் வாங்கும் பழக்கம் இருந்தது.
ஆனால், என் தந்தையின் மறைவுக்கு பிறகுதான் அந்த ராணுவ கேண்டீனில் மதுபானங்களும் வாங்கிக்கொள்ளலாம் என்று தெரியவந்தது. ஒரு நாள் என் தந்தை பயன்படுத்திய டிரங்க் பெட்டியை உடைத்து பார்த்தேன். அப்போது தான் எனக்கு தெரிந்தது என் தந்தை மதுபானங்களை விற்று கிடைத்த பணத்தில் என்னை படிக்க வைத்தார் என்று. ஒவ்வொரு மாதமும் ராணுவ கேண்டீனில் மதுபானங்களை வாங்கி அவற்றை திருவனந்தபுரத்தில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் என்னை படிக்க வைத்தார்.
காவல்துறையின் பணி என்பது கடினமான பணி. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஆடு திருடும் கும்பலை 26-கிலோமீட்டர் விரட்டிச் சென்று பிடித்தனர். அதை பழிவாங்கும் நோக்கில் உதவி ஆய்வாளர் பூமிநாதன் என்பவரை கல்லால் அடித்து ஆடு திருடர்கள் கொன்றுவிட்டனர். காவல் பணி என்பது ஆபத்தான பணி தான், பெண் காவலர் என்று கூட பார்க்காமல் கோவில் திருவிழாவில் கொலை செய்ய முயற்சி செய்தனர். இது போன்ற ஆபத்துகளை எதிர்கொண்டு தான் தமிழக காவல்துறை பணியாற்றி வருகிறது.
இதேபோன்று ஆண்டுக்கு 250 காவலர்கள் மரணம் அடைகின்றனர். இதில் குறிப்பாக 50 காவலர்கள் சாலை விபத்திலும், 40 காவலர்கள் தற்கொலை செய்தும், மற்றவர்கள் ரம்மி போன்ற சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்று காவலர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை ஓய்வு மட்டுமே. இதனையும் நிறைவேற்றும் நோக்கில் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பதை முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பிட்காய்ன், கிரிப்டோகரன்சி மோசடிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தகவல் அளித்தால் அவர்களின் பணம் மீட்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் பொதுமக்களுக்கு விளக்கி கூற வேண்டிய காவலர்கள் ஒருபோதும் இதுபோன்ற மோசடிகளில் சிக்கி ஏமாறக்கூடாது.
பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள காவலர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் 6 பிள்ளைகள் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காவலர் குடும்பத்தில் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பள்ளியும் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது தொடங்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெறும் மோதல்காள் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறினார். நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலில் மாணவர்கள் மீது தான் தவறு உள்ளதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை எனவும் மீண்டும் இது போல் நடந்துகொண்டால், வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!